வங்கதேச சிறுபான்மையினர் போராட்டம்; ராணுவ துப்பாக்கி சூட்டில் மூவர் பலி
வங்கதேச சிறுபான்மையினர் போராட்டம்; ராணுவ துப்பாக்கி சூட்டில் மூவர் பலி
ADDED : செப் 30, 2025 03:11 AM

டாக்கா : வங்கதேசத்தின் சிட்டகாங் மலைப்பகுதியின் கக்ராச்சாரி மாவட்டத்தில் ஹிந்து, பவுத்த சமூகத்தினர் நடத்திய போராட்டத்தைக் கலைக்க அந்த நாட்டின் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகினார்.
அங்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக் கால அரசு அமைந்துள்ளது. இந்நிலையில், அங்கு சிறுபான்மையினருக்கு எதிராக, குறிப்பாக ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ளன.
மாயம்
இந்நிலையில், தலைநகர் டாக்காவில் இருந்து வடகிழக்கே 270 கி.மீ., தொலைவில் கக்ராச்சாரி எனும் மலை மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தின் பழக்குடியினத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் திடீரென மாயமானார்.
ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் மயங்கிய நிலையில் மாணவி கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்தது. இது ஹிந்து, பவுத்த சமூகங்களைச் சேர்ந்த பூர்வக்குடி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சக்மா மற்றும் மர்மா பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள், மாவட்டத் தலைநகரின் சாலைகளில் எரியும் டயர்கள் மற்றும் மரக்கட்டைகளை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், வங்கதேச சமூகத்தைச் சேர்ந்த வாலிபர்களால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டினர்.
இதனால், பழங்குடியினருக்கும், வங்கதேச சமூகத்தினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பல்வேறு கடைகள் மற்றும் வீடுகள் தீயிட்டு கொளுத்தப் பட்டன. இதையடுத்து அம்மாவட்டத்தில் தடை உத்தரவு போடப்பட்டது.
வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவம், துணை ராணுவப் படை, வங்கதேச எல்லை காவல்படை மற்றும் போலீசார் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கக்ராச்சாரி மாவட்டத்தைத் தாண்டி குய்மாரா உட்பட மற்ற பகுதிகளுக்கும் வன்முறை பரவியது. இதை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவரை, ராணுவத்தின் உதவியுடன் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் ஆறு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கப்பட உள்ளார்.
இச்சம்பவம் ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்தாண்டு ஆகஸ்டில் பதவி விலகியதில் இருந்து, வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறினர்.
தாக்குதல் கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் இதுவரையில், சிறுபான்மையினரான ஹிந்து மற்றும் பவுத்த சமய சமூகத்தினர் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளன.
மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையின்படி, 152 ஹிந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சிறுபான்மையினருக்கு சொந்தமான 157 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
ஹிந்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகளவில் பதிவாகிஉள்ளன.
சிறுபான்மையினர் உரிமைக் குழுவான வங்கதேச ஹிந்து, பவுத்த, கிறிஸ்துவ ஐக்கிய கவுன்சில், இந்த வன்முறைகளை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளது.