ADDED : ஆக 23, 2024 08:02 PM
ஆவடி:ஆவடி அடுத்த பட்டாபிராம், கோபாலபுரத்தை சேர்ந்த, 41 வயது நபர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டருகே தேங்கிய கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி, டெங்கு பாதிப்பை சுற்றுவட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது. இவர் ஐந்து நாட்களுக்கும் மேலாக காய்ச்சலால் பாதித்த நிலையில், தனியார் பரிசோதனை மையத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது, 17 மற்றும் 10 வயதுள்ள இரண்டு மகள்களுக்கும் தொடர் காய்ச்சல் இருப்பதால், பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதே பகுதியில் வசிக்கும் 30 வயது இளம் பெண்ணும், மூன்று நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்தது. டெங்கு அறிகுறியுடன், தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது குழந்தைக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
இவரது வீட்டின் அருகிலும் கழிவுநீர் தேங்கி சுகாதார பாதிப்பை ஏற்படுத்தியதால், டெங்குவை பரப்பும் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆவடி மாநகராட்சி சுகாதார நல அலுவலர் ராஜேந்திரன் கூறுகையில், ''தனியார் மருத்துவமனை அளித்த பரிசோதனைகளை டெங்கு என ஏற்க முடியாது. அரசு மருத்துவமனையில் பரிசோதிக்க வேண்டும். ஆயினும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பகுதியில், கொசு ஒழிப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது,'' என்றார்.

