/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காலி பணியிடத்தால் கூடுதல் பணி சுமை ஊராட்சி செயலர்கள் அவதி
/
காலி பணியிடத்தால் கூடுதல் பணி சுமை ஊராட்சி செயலர்கள் அவதி
காலி பணியிடத்தால் கூடுதல் பணி சுமை ஊராட்சி செயலர்கள் அவதி
காலி பணியிடத்தால் கூடுதல் பணி சுமை ஊராட்சி செயலர்கள் அவதி
ADDED : மே 10, 2024 09:56 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில் மொத்தம் 73 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்டவை வசூலித்தல் போன்ற பல்வேறு பணிகளை ஊராட்சி செயலர்கள் செய்து வருகின்றனர்.
மேலும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊராட்சியில் இருந்து அரசுக்கு தேவையான புள்ளி விபரங்களை சமர்ப்பித்தல், மாவட்ட நிர்வாகம் மூலம் கிராம ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கொண்டு சேர்த்தல் போன்ற பணிகளையும் ஊராட்சி செயலர்கள் மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு, ஊராட்சி செயலர்களின் பணி முக்கியமானதாக உள்ளது. இந்நிலையில், உத்திரமேரூர் ஒன்றியத்தில், 16 ஊராட்சிகளில் செயலர் பணியிடம், கடந்த 3 ஆண்டுகளாக காலியாக உள்ளது.
காலியாக உள்ள இந்த ஊராட்சிகளுக்கு, அருகாமையில் உள்ள ஊராட்சி செயலர்கள் கூடுதலாக கவனிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
இதனால், ஊராட்சி செயலர்கள், கூடுதல் பணி காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக புலம்பி வருகின்றனர். ஒரு செயலர் இரு ஊராட்சிகளை கவனிப்பதால், பணிச்சுமை ஏற்படுவதோடு, வளர்ச்சி பணிகளும் முறையாக செய்யப்படாமல், பாதிப்பதாக பல தரப்பினரும் கூறி வருகின்றனர்.
தெருவிளக்கு பழுது, குடிநீர், சாலை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து ஊராட்சி செயலரிடம் நேரடியாக புகார் தெரிவிக்க இயலவில்லை எனவும், காலி பணியிட ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் புலம்பி வருகின்றனர்.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி செயலர்கள் சங்க நிர்வாகி கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே ஊராட்சியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஊராட்சி செயலர்கள், கடந்தாண்டில் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோல, காலியாக உள்ள ஊராட்சிகளில், செயலர்கள் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
உத்திரமேரூர் மட்டுமின்றி, மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும், குறிப்பிட்ட ஊராட்சிகளில் செயலர் பணியிடம் காலியாக உள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடத்தில் மனு அளித்தும், மாநிலம் தழுவிய போராட்டங்களில் பங்கேற்றும் வருகிறோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.