/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 222 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 222 மனுக்கள் ஏற்பு
ADDED : செப் 17, 2024 06:18 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில், வேலைவாய்ப்பு, பட்டா, உதவித்தொகை, ஆக்கிரமிப்பு அகற்றுதல் என பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 222 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
குறைதீர் கூட்டம் துவங்கும் முன்பாக, சமூக நீதி நாள் உறுதிமொழியை, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், அரசு ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர். வாலாஜாபாத் தாலுகா, வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்த அஞ்சூரான் என்பவர் அளித்த மனு:
வாரணவாசி காலனி பகுதியில், 220 குடும்ப அட்டைகள் உள்ளன. நாங்கள், 2 கி.மீ.,துாரம் பயணித்து, கிராமப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வருகிறோம்.
இது சிரமமாக உள்ளது. இலவச அரிசியை ஆட்டோவில் எடுத்து வர வேண்டியுள்ளது. இது எங்களுக்கு கூடுதல் செலவாகிறது. எனவே, எங்கள் காலனி பகுதியிலேயே ரேஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
குறைதீர் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், திட்ட இயக்குனர் ஆர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.