/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 3 ஆண்டுகளாக தீராத பிரச்னைகள்... சரமாரி குற்றச்சாட்டு: கவுன்சிலர்களுக்கு மேயர் தன்னிலை விளக்கம்
/
காஞ்சியில் 3 ஆண்டுகளாக தீராத பிரச்னைகள்... சரமாரி குற்றச்சாட்டு: கவுன்சிலர்களுக்கு மேயர் தன்னிலை விளக்கம்
காஞ்சியில் 3 ஆண்டுகளாக தீராத பிரச்னைகள்... சரமாரி குற்றச்சாட்டு: கவுன்சிலர்களுக்கு மேயர் தன்னிலை விளக்கம்
காஞ்சியில் 3 ஆண்டுகளாக தீராத பிரச்னைகள்... சரமாரி குற்றச்சாட்டு: கவுன்சிலர்களுக்கு மேயர் தன்னிலை விளக்கம்
ADDED : மார் 05, 2025 01:22 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியின் மேயர் மகாலட்சுமி பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தன. நகருக்கு தேவையான வளரச்சி திட்டங்கள் மேற்கொண்டு வருவதாக மேயர் மகாலட்சுமி தெரிவிக்கும் நிலையில், பல பிரச்னைகளுக்கு தீர்வே கிடைக்கவில்லை என, கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு, 2022ல், மார்ச் மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்ற 9வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மகாலட்சுமியை, மேயராக தி.மு.க., மேலிடம் அறிவித்தது. இவரது கணவர் யுவராஜ், மாவட்ட இளைஞரணி நிர்வாகி என்பதாலும், மகாலட்சுமி பெயர் பரிசீலனை செய்யப்பட்டது.
கடந்த 2022, மார்ச் 4ம் தேதி, அவர் மேயராக பதவி ஏற்றார். பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயரான இவருடைய நிர்வாகத்தின் கீழ், மூன்று ஆண்டுகளில் நகரின் வளர்ச்சி அதிகரித்துள்ளதா என நகரவாசிகளும், கவுன்சிலர்களும் மதிப்பிடுகின்றனர். கவுன்சிலர்கள் சிலர் மேயருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு நிலையிலும் தற்போதும் இருக்கின்றனர்.
ஆன்மிகம் மற்றும் பட்டு நகரான காஞ்சிபுரம் நகருக்கு தேவையான வளர்ச்சி திட்டம் பல நிறைவேற்ற வேண்டிய தேவை இருந்த நிலையில், மூன்று ஆண்டுகளில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன.
ஆனால், மக்களுக்கு நேரடியாக பலன் அளிக்கக்கூடிய சில அடிப்படை பணிகள்கூட மேற்கொள்ளப்படாதது நகரவாசிகள் கடுமையாக பாதிக்கின்றனர். உதாரணமாக, நகரின் பல சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. இன்று வரை அந்த சாலைகளை சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் இல்லை.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த ஊர் என்பதால், தி.மு.க., அரசுக்கு காஞ்சிபுரம் நகர் மீதான கவனம் உள்ளது. இதனால், மார்க்கெட், எல்.இ.டி., விளக்குகள், அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளது.
ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் மாநகராட்சியில் போதிய வளர்ச்சி திட்டங்கள் நடைபெறவில்லை எனவும், பல பணிகள் அரைகுறையாகவும், நகர் முழுதும் இன்று வரை பாதாள சாக்கடை பிரச்னையை தீர்க்கவே முடியவில்லை என, கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் தரப்பில் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்ந்து, மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், நிர்வாக ரீதியில் மாநகராட்சிக்கான தரத்திற்கு இன்னும் வரவில்லை. மூன்று ஆண்டுகளில் கவுன்சிலர்களின் கோரிக்கை மனுக்களுக்கு போதிய மதிப்பு அளிக்கவில்லை.
பல வார்டுகளில் வளர்ச்சி திட்டங்கள் செய்யவே இல்லை. முறைகேடான குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு போன்றவை காண முடிகிறது.
எங்களின் கோரிக்கையை அதிகாரிகளிடம் சொல்லியும் போதிய நடவடிக்கை இல்லாதது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.
கழிவுநீர் அடைப்பு நீக்க போதிய வாகனம் இல்லாததால், தெருக்களில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. கோவில்கள் நிறைந்த காஞ்சிபுரத்தில் கழிவுநீர் பிரச்னை தீரவே இல்லை. குப்பை அகற்றும் பணியும் சரியாக நடப்பதில்லை. கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கும், வார்டு பிரச்னைகளுக்கும் முக்கியத்துவம் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேயர் மகாலட்சுமி கூறியதாவது:
மூன்று ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சி பணிகள் மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக, ஓரிக்கை, செவிலிமேடு, நத்தப்பேட்டை போன்ற இடங்களுக்கு, 350 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டமும், நகர் முழுதும் 350 கோடியில் குடிநீர் திட்ட பணிகளும் கொண்டு வந்துள்ளோம்.
சாலை சீரைமைப்பு, கட்டடங்கள் கட்டியது, பாலம் கட்டியது, மாநகராட்சிக்கு புதிய கட்டடம், மார்க்கெட்டுக்கு புதிய கட்டடம் என, பல திட்டங்கள் செய்துள்ளோம்.
என் பதவி முடியும் முன்பாக, துவங்கிய நடைபெறும் திட்டங்கள் அனைத்தும் அடுத்த இரு ஆண்டுகளில் முடித்து விடுவோம். கடந்தாண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் பிரச்னையை கவுன்சிலர்கள் எழுப்பியதால், ஒராண்டு பல வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுவிட்டன. கூட்டமே நடத்த முடியாமல் போனது. கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு வார்டுக்கும், 10 லட்ச ரூபாய் அளவிலான பிரச்னைகளே உள்ளன. அதை சரி செய்து கொடுக்க அதிகாரிகளிடம் பல முறை கேட்டு விட்டேன்.
அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை. கவுன்சிலர்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி விட்டேன்.
நகரில் 350 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் முடிந்த உடன், அனைத்து சாலைகளும் புதியதாக அமைக்கப்படும். ஏற்கனவே செயல்படும் பாதாள சாக்கடை திட்டத்தை சீரமைக்க, அமைச்சரிடம் நிதி கேட்டுள்ளோம்.
வ்வாறு அவர் கூறினார்.