sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தேர்தல் கமிஷன் கெடுபிடியால் வியாபாரம் ஸ்தம்பிப்பு நடத்தை விதி காரணமாக சொத்து பதிவும் குறைந்துள்ளது

/

தேர்தல் கமிஷன் கெடுபிடியால் வியாபாரம் ஸ்தம்பிப்பு நடத்தை விதி காரணமாக சொத்து பதிவும் குறைந்துள்ளது

தேர்தல் கமிஷன் கெடுபிடியால் வியாபாரம் ஸ்தம்பிப்பு நடத்தை விதி காரணமாக சொத்து பதிவும் குறைந்துள்ளது

தேர்தல் கமிஷன் கெடுபிடியால் வியாபாரம் ஸ்தம்பிப்பு நடத்தை விதி காரணமாக சொத்து பதிவும் குறைந்துள்ளது


ADDED : மார் 21, 2024 11:05 AM

Google News

ADDED : மார் 21, 2024 11:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் ஏப்., 19ல், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள், பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் களம் இறங்கியது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 16 நிலையான கண்காணிப்பு குழு, 16 பறக்கும் படை, 16 வீடியோ கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லும் பணம் மற்றும் பொருட்களுக்கு ஆவணங்கள் இல்லையென்றால், அவற்றை பறிமுதல் செய்கின்றனர்.

இதனால், காய்கறி, நகை, பட்டு சேலை, பாத்திரங்கள் உட்பட சிறு, குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பட்டு சேலைகளின் கேந்திரமாக விளங்கும் காஞ்சிபுரத்தில், வியாபாரம் முழுதுமாக முடங்கும் நிலை உருவாகி உள்ளது.

தை, பங்குனி, கார்த்திகை ஆகிய மாதங்களில் பட்டு சேலை வியாபாரம் அமோகமாக இருக்கும்.

இந்நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகளால், வெளியூர் வாடிக்கையாளர்கள் காஞ்சிபுரம் வருவது குறைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தோர், அதிக விலை மதிப்புள்ள சேலைகளை வாங்கி செல்வது வழக்கம். காரில் ரொக்கமாக பணத்தை கொண்டு வந்தால், தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்வர் என பயந்து, பலரும் வரவில்லை.

'தேர்தல் கெடுபிடியால், 30 கோடி ரூபாய்க்கான வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், உற்பத்தியும் குறைந்து நெசவாளர்கள் சிரமப்படுகின்றனர்' என, பட்டு சேலை வியாபாரிகள் தெரிவித்தனர்.

மிட்டாய் வியாபாரி, காய்கறி வியாபாரி, வாரம், மாதம் தண்டல் விடுபவர்கள் எந்தவித ஆவணமின்றி தான் பணப் பரிவர்த்தனை நடக்கும்.இதே போல, திருமணம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் மணமக்கள் குடும்பத்தினர், பொருட்களை வாங்க பணத்தை எடுத்துச் செல்ல முடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

வணிகர்கள், வியாபாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்க முடியாததால், கடையில் இருப்பு குறைந்து வியாபாரம் கெடும் சூழல் உருவாகி உள்ளது.

சென்னை, புறநகர்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வந்து, காய்கறி, பழங்கள், பூ மற்றும் உணவு தானிய பொருட்களை மொத்த விலைக்கு வாங்கி செல்வர். தேர்தல் விதி காரணமாக, 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்து வரமுடியாததால், கோயம்பேடு சந்தைக்கு வருவோர் குறைந்துள்ளனர். இதனால், இறைச்சி, உணவுப் பொருள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் கூறியதாவது:

கோயம்பேடு சந்தையில் காய்கறி வியாபாரம் செய்கிறோம். இச்சந்தையில் பதிவு செய்யப்படாத 'பில்' தான் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாகவே ஒரு வியாபாரி, 2 லட்சம் ரூபாய் வரை எடுத்து வருவார். எனவே, 50,000 என்ற வரம்பை, 2 லட்சம் ரூபாயாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகளவில் பணம் புழங்கும், பத்திரப்பதிவிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. சென்னையில் வளர்ச்சியடையும் முக்கிய பகுதிகளான ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., நீலாங்கரை, பள்ளிக்கரணை, திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகங்களில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, பத்திரப்பதிவுகள் கணிசமாக குறைந்துள்ளன.

பரிமாற்றத்துக்காக எடுத்துச் செல்லும் பணத்தை, தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்வதால், மனை, வீடுகள் வாங்குவதில் விற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரப் பதிவுகளும் வெகுவாக குறைந்துள்ளன.

அதேபோல், பெரிய அறுவை சிகிச்சைக்காக 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தை எடுத்துச் செல்வதிலும் நோயாளிகளின் குடும்பத்தினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன், 50,000 ரூபாய் என்பது பெரிய தொகையாக இருந்தது. தற்போது, சர்வ சாதாரணமாக அந்த பணத்தை செலவு செய்வதால், தேர்தல் நடத்தை விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

உண்மையிலேயே இந்த சோதனை தேர்தலுக்காக நடக்கிறதா அல்லது வியாபாரிகளை குறி வைத்து நடத்தப்படுகிறதா தெரியவில்லை. எந்த தேர்தலிலாவது, வாகனத்தில் செல்லும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், போலீஸ் மற்றும் ஊடகத்தினரின் வாகனங்களை சோதனை செய்கின்றனரா? இந்த தேர்தலால் நகை வியாபாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. நகை செய்வதற்காக வெள்ளி, தங்கம் வழங்குவோரும், எடுத்துச் செல்வோரும் தயங்குகின்றனர். தேர்தல் முடியும் வரை, எங்கள் தொழில் முடங்கும் நிலை தான்.

- ராஜேந்திரபாபு, 48,

வெள்ளி நகைக்கடை உரிமையாளர், பெரம்பூர்.

வழக்கமான பணி தான்

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் தர முயற்சி நடப்பதை தடுக்க, தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு முன்னும், வாகன சோதனைகளை அன்றாட பணிகளாக தான் மேற்கொண்டு வந்தோம். இப்போதும் அதை தொடர்கிறோம். உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட நகை, பணத்தை பறிமுதல் செய்துள்ளோம். வாகன சோதனையில் கஞ்சா, குட்கா மற்றும் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்துள்ளோம். தேர்தல் நேரம் என்பதால், தற்போது நடத்தப்படும் சோதனை கவனத்தை ஈர்த்துள்ளது.

- மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி,

சென்னை மாநகர போலீஸ்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளால், எங்களை போன்ற கட்டுமான தொழில் செய்வோர், ஊழியர்களுக்கு சம்பளம் கூட தர முடியவில்லை. சம்பளம் சரியாக கொடுக்கவில்லை என்றால், பணிகளில் தொய்வு ஏற்படும் சூழல் உருவாகும். குறைந்தபட்சம், கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை கூட வாங்க முடியாமல், ஒவ்வொரு நாளும் சிரமமாக உள்ளது.

- ஜெ.ஜெயகுமார், கட்டுமான தொழில், பட்டாபிராம்.

வியாபாரத்திற்காக அரிசி, காய்கறி, இறைச்சிகளை, எங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாங்க, ரொக்கமாக பணம் எடுத்துச் செல்கிறோம். அனைத்திற்கும், ஆன்லைன் வர்த்தகம் செய்ய முடியாது. உரிய ஆவணங்களையும் கொண்டு செல்ல முடியாது. திருமணம், திருவிழா போன்ற விசேஷ நாட்களில் நடக்கும் வியாபாரத்திற்காக, தேவையான பொருட்களை, மொத்தமாக வாங்க சென்றால், தேர்தல் நன்னடத்தை விதியை காட்டி, எங்களிடம் உள்ள பணத்தை பறிமுதல் செய்வது என்ன நியாயம்? ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர். எங்களை போன்ற வியாபாரிகளின் நிலைதான் நெருக்கடியாகி விடுகிறது.

-- எஸ்.ஜீலான் பாஷா, 40,

திருவள்ளூர் தெற்கு மாவட்ட வணிகர் சங்க பொருளாளர், செங்குன்றம்.

- நமது நிருபர் குழு -






      Dinamalar
      Follow us