ADDED : ஜூன் 10, 2024 05:11 AM

உத்திரமேரூர், : உத்திரமேரூர் ஒன்றியம், பொற்பந்தல் ஊராட்சிக்கு உட்பட்டது கிடங்கரை கிராமம். இக்கிராமத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ரேஷன் கடையில், 120 குடும்ப அட்டைதாரர்கள் பயனாளிகளாக உள்ளனர்.
இப்பகுதிக்கான ரேஷன் கடை, அப்பகுதி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி எதிரே, 20 ஆண்டுகளுக்கு முன் 'அசேபா' திட்டத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்குகிறது.
இக்கட்டடம் மிகவும் பழுதடைந்து, மழைக்காலங்களில் தளத்தின் வழியாக மழைநீர் சொட்டுகிறது. அச்சமயங்களில், ரேஷன் கடையில் உள்ள உணவுப் பொருட்களை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது.
இதனால், அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை பாதுகாப்பதில் சிக்கல் உள்ளது.
எனவே, கிடங்கரை கிராமத்தில் ரேஷன் கடை செயல்படும் பழுதடைந்த கட்டடத்தை இடித்து, புதிய ரேஷன் கடை கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.