UPDATED : ஆக 19, 2025 02:56 AM
ADDED : ஆக 19, 2025 02:55 AM

சென்னை : ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'டிட்டோ - ஜாக்,' தன் 10 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற, நான்கு நாட்கள் கெடு விதித்துள்ளது.
மத்திய அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 17, 18ம் தேதிகளில் போராட்டம் நடத்துவதாக, டிட்டோ - ஜாக் அறிவித்திருந்தது.
வரும் 22ல், தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், டிட்டோ - ஜாக் நிர்வாகிகளுடன், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் முன்னிலையில் பேச்சு நடத்தப்பட்டது. கோரிக்கைகள் குறித்து, முதல்வரிடம் தெரிவிப்பதாகவும், முக்கிய கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாகவும் அமைச்சர் உறுதி அளித்தார்.
அதைத்தொடர்ந்து, சென்னை திருவல்லிக்கேணியில் நடந்த டிட்டோ - ஜாக் அமைப்பின் செயற்குழு கூட்டத்தில், கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர் மகேஷுக்கு, 22ம் தேதி வரை அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதற்குள் உரிய அறிவிப்பை வெளியிடாவிட்டால், போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.