/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆத்துார் சுங்கச்சாவடியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
/
ஆத்துார் சுங்கச்சாவடியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஆத்துார் சுங்கச்சாவடியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஆத்துார் சுங்கச்சாவடியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ADDED : மே 07, 2024 11:34 PM

அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்டத்தின் எல்லை முடிவில், அச்சிறுபாக்கம் அருகே, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஆத்துார் சுங்கச்சாவடி அமைந்துள்ளது.
தென் மாவட்டங்களை செங்கல்பட்டு மாவட்டத்துடன் இணைக்கும் மிக முக்கிய பிரதான சாலை என்பதால், நாள்தோறும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் இரு மார்க்கத்திலும் கடந்து செல்கின்றன.
இதில், சாலையின் இரு மார்க்கத்திலும், புற்றீசல் போல நாளுக்கு நாள், தேநீர் கடைகள் மற்றும் சிற்றுண்டி உணவகங்கள் அதிகரித்து வந்தன.
இதனால், டீ, காபி மற்றும் சிற்றுண்டி சாப்பிடுவதற்காக வரும் வாகனங்கள், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டன.
இதனால், வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது. இதனால், தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை, தேசிய நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மதுராந்தகம் காவல் எல்லைக்குட்பட்ட போலீசார், ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன், 10க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆத்துார் சுங்கச்சாவடி பகுதியில், ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்ட இடத்தில், கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடைபெறாத வண்ணம், இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

