/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குளம் சீரமைத்து கரையில் மரக்கன்று நடவு
/
குளம் சீரமைத்து கரையில் மரக்கன்று நடவு
ADDED : பிப் 25, 2025 02:14 AM

திருமுக்கூடல்,
உத்திரமேரூர் ஒன்றியம் திருமுக்கூடல் கிராமத்திற்கு சொந்தமான முள்குட்டை குளம் உள்ளது. புல்லம்பாக்கம், வயலக்காவூர் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், கால்வாய் வழியாக திருமுக்கூடல் முள்குட்டை குளத்திற்கு வந்தடைந்து, நிரம்பி வழியும் தண்ணீர் அப்பகுதி பாலாற்றில் கலக்கிறது.
இந்த குளம் முறையாக பராமரிக்காததால், பல ஆண்டுகளாக ஆகாய தாமரை உள்ளிட்ட செடி, கொடிகள் வளர்ந்து காணப்பட்டது. இக்குளத்தை தனியார் அறக்கட்டளையோடு, 'விதைகள்' தன்னார்வ அமைப்பு இணைந்து சீரமைப்பு பணி மேற்கொண்டது.
குளத்தில் உள்ள முள் மரங்கள் மற்றும் செடி, கொடிகள் உள்ளிட்டவை அகற்றி, துார்வாரி சுத்தம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஊராட்சி நிர்வாகத்திடம் குளம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது, அக்குளக்கரையை சுற்றிலும், நாவல், இலுப்பை, வேம்பு உள்ளிட்ட பறவைகளுக்கான இரையாக பழவகை மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, மரக்கன்றுகளை நடவு செய்து துவக்கி வைத்தார்.

