/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓய்வு சப் - இன்ஸ்., மரணம் கொலை வழக்காக மாற்றம்
/
ஓய்வு சப் - இன்ஸ்., மரணம் கொலை வழக்காக மாற்றம்
ADDED : ஏப் 16, 2024 06:49 AM
சேலையூர், : சேலையூர், ரங்கா சாலை, ராஜா அய்யர் தெரு சந்திப்பைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 69; ஓய்வு பெற்ற காவல் துறை உதவி ஆய்வாளர். கடந்த 12ம் தேதி, இவரது வீட்டின் அருகே ஒருவர் போதையில் படுத்திருந்துள்ளார்.
அவ்வழியாக சென்ற பெண்கள், அந்த நபரின் மொபைல் போனை எடுத்து வந்து, கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்து, அடையாளம் தெரியாத நபர், சாலையில் போதையில் படுத்து கிடப்பதாகவும், அவர் செயின், மோதிரம் அணிந்திருப்பதாகவும் கூறி சென்றதாக கூறப்படுகிறது. கிருஷ்ணமூர்த்தி அங்கு சென்று விசாரித்துள்ளார்.
அப்போது,போதையில் இருந்த நபர், 'என் போனை நீ தான் வச்சிருக்கியா... என் வண்டி சாவியை கொடு' எனக் கூறி, கிருஷ்ணமூர்த்தியை அடித்து, கீழே தள்ளிவிட்டார்.
இதை பார்த்து, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, போதை நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கீழே தள்ளிவிட்டதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையில், கிருஷ்ணமூர்த்தியை தள்ளிவிட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவராமன், 27, என்பதும், கார் ஓட்டுனர் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணமூர்த்தி, 13ம் தேதி இரவு உயிரிழந்தார். இதையடுத்து, சேலையூர் போலீசார் இவ்வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரிக்கின்றனர்.

