/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கனரக வாகனங்களால் உத்திரமேரூரில் விபத்து அபாயம்
/
கனரக வாகனங்களால் உத்திரமேரூரில் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 31, 2024 09:16 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூரில், 40,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். உத்திரமேரூரை சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் உத்திரமேரூர் வழியாக செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யாறு, வந்தவாசி மற்றும் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
உத்திரமேரூர் சாலை மிகவும் குறுகியதாக உள்ளதால், காலை மற்றும் மாலை நேரங்களில், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், இப்பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், குறிப்பிட்ட இடத்திற்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனிடையே, உத்திரமேரூரில் புறவழி சாலை திட்டம் துவங்கி தற்போது நடைபெறுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மற்றும் வந்தவாசி பகுதிகளில் இயங்கும் தனியார் கல்குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகளில் இருந்து, மானம்பதி -- உத்திரமேரூர் சாலை வழியாக, தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இதில், அரசு விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் ஏற்றி செல்லப்படுகின்றன.
இதனால், உத்திரமேரூர் சாலையில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது.
எனவே, உத்திரமேரூர் சாலையில் அதிக பாரம் ஏற்றும் ரோடு வாகனங்கள் குறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.