/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தலை முடி வியாபாரிகளிடம் ரூ.4.50 லட்சம் பறிமுதல்
/
தலை முடி வியாபாரிகளிடம் ரூ.4.50 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 28, 2024 09:50 PM
சென்னை:மாதவரம் தொகுதி தேர்தல் கண்காணிப்பு படையினர், நேற்று அதிகாலை புழல் மத்திய சிறைச்சாலை - தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட, 'இனோவா' காரை நிறுத்தி விசாரித்தனர்.
அதில் பயணித்தவர்கள், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராஜு ஜெகன்னாதன், தாசரி வெங்கடேஸ்வரா ராவ், ராமகோட்டால ஜெகன்னாதன் என்பதும், ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் தலை முடிகளை சேகரித்து, சென்னையில் உள்ள, 'விக்' தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்கும் தொழில் செய்து வருவதும் தெரிவந்தது.
அவர்களிடம், உரிய ஆவணமின்றி இருந்த, 4.50 லட்சம் ரூபாயை, கண்காணிப்பு படையினர் பறிமுதல் செய்து, மாதவரம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரம்
லோக்சபா தேர்தலையொட்டி, காஞ்சிபுரம் அடுத்த, பொன்னியம்மன் பட்டறை அருகில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனுசியா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கமல்நாதன் என்பவரது காரை நிறுத்தி சோதனை செய்ததில் 2 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில், இருசக்கர வாகனம் வாங்குவதற்காக 2 லட்சம் ரூபாய் எடுத்து வந்ததாக கூறியுள்ளார்.
உரிய ஆவணங்கள் இல்லாததால் 2 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த 2 லட்சம் ரூபாயை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான கலைவாணியிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

