/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'சாம்சங்' தொழிலாளர்கள் 2வது நாளாக போராட்டம்
/
'சாம்சங்' தொழிலாளர்கள் 2வது நாளாக போராட்டம்
ADDED : செப் 11, 2024 12:16 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரத்தில், வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் உற்பத்தி செய்யும், 'சாம்சங்' தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், எட்டு அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, 'சாம்சங்' தொழிலாளர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் போராட்டத்தை துவக்கினர். அவர்களின் கோரிக்கை வருமாறு:
சி.ஐ.டி.யு., எனும் இந்திய தொழிற்சங்க மையத்தை அங்கீகரிக்க வேண்டும், சி.ஐ.டி.யு., உறுப்பினர்களை, போட்டி தொழிலாளர் கமிட்டியில் இணையுமாறு கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
சாம்சங் நிறுவனத்தில் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தை பதிவு செய்ய விடாமல், தொழிற்சங்க பதிவாளர் அலுவலகத்தை நிர்பந்திப்பதை கைவிட வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, எட்டு மணி நேர பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி,, நேற்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சாம்சங் நிர்வாகம் மற்றும் சி,ஐ,டி,யு., தொழிலாளர்கள் உடனான சமரச பேச்சு, இருங்காட்டுக்கோட்டை உள்ள தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்) அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இருங்காட்டுக்கோட்டை தொழிலாளர் துணை ஆணையர் கமலக்கண்ணன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சில், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தர்ராஜன், மாநில செயலர் முத்துக்குமார், தொழிற்சாலை ஊழியர்கள், தொழிற்சாலை ஆலோசனை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இது குறித்து சவுந்தர் ராஜன் கூறியதாவது;
பெரும்பான்மை ஊழியர்கள் உள்ள குழுவினை அழைத்து கோரிக்கை குறித்து பேச்சு நடத்த வேண்டும். எங்களின் முதன்மையாக இந்த கோரிக்கையை நிர்வாகம் ஏற்க மறுத்ததால் பேச்சு தோல்வி அடைந்தது.
எனவே, போராட்டம் தொடரும். அடுத்த கட்ட பேச்சு, நாளை மறுதினம், 13ம் தேதி மேற்கொள்வது என இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.