/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
1,000 'இ -- பஸ்' இயக்க எம்.டி.சி., நடவடிக்கை டெண்டர் எடுக்க டாடா, அசோக் லேலண்டு ஆர்வம்
/
1,000 'இ -- பஸ்' இயக்க எம்.டி.சி., நடவடிக்கை டெண்டர் எடுக்க டாடா, அசோக் லேலண்டு ஆர்வம்
1,000 'இ -- பஸ்' இயக்க எம்.டி.சி., நடவடிக்கை டெண்டர் எடுக்க டாடா, அசோக் லேலண்டு ஆர்வம்
1,000 'இ -- பஸ்' இயக்க எம்.டி.சி., நடவடிக்கை டெண்டர் எடுக்க டாடா, அசோக் லேலண்டு ஆர்வம்
ADDED : செப் 13, 2024 10:26 PM
சென்னை:சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தினமும் 3,454 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 28.70 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
தற்போது, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளாக உயர்த்தப்பட்டுள்ளன. கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையமும் திறக்கப்பட்டுள்ளதால், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் தனியார் 'எலக்ட்ரிக்' பேருந்துகளை இயக்க டெண்டர் வெளியிட்டு, நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.
இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் அதிகரித்து வருவதால், பொது போக்குவரத்தான பேருந்துகளின் தேவை அதிகமாக இருக்கிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், மாநகர பேருந்துகளின் தேவை 7,000 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதுள்ள பஸ்களை இயக்குவதால் மட்டுமே தேவையை பூர்த்தி செய்ய முடியாது. மேலும், புதிய பஸ்கள் வரும்போதெல்லாம், 50 சதவீதம் பழைய பேருந்துகளை நீக்கிவிட்டு இயக்குவதற்கே சரியாக இருக்கிறது. மீதமுள்ள 50 சதவீத பேருந்துகளை மட்டுமே புதிய தடங்களில் இயக்க முடிகிறது.
மற்றொருபுறம், டீசல் விலை உயர்வு, உதிரி பொருட்கள் உயர்வு, பணியாளர்களுக்கான சம்பளம் என கூடுதல் செவுகளால், பேருந்து இயக்க செலவும் அதிகரித்து வருகிறது. ஆட்கள் பற்றாக்குறையால், முழு அளவில் பேருந்துகள் இயக்க முடியவில்லை. எனவே, கட்டண உயர்வின்றி, தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு, பேருந்துகளை இயக்க உள்ளோம்.
சென்னையில், மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ், 1,000 எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க டெண்டர் வெளியிட்டதில், டாடா, அசோக் லேலண்டு உட்பட ஆறு நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன.
இறுதிகட்டமாக நிறுவனம் தேர்வு செய்து, அடுத்த ஆறு மாதங்களில் தனியார் பேருந்துகளை படிப்படியாக கொண்டுவர உள்ளோம். மேலும், இந்த பஸ்களை பராமரித்து இயக்கும் வகையில், ஏற்கனவே மாநகர போக்குவரத்து கழகத்தில் உள்ள இடங்களை ஒதுக்கி, பேட்டரி சார்ஜிங் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளை விரைவில் துவங்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.