/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் ஜவுளி ஏற்றுமதி மைய பணி...கிடப்பில் :ரூ.300 கோடி வருவாய் ஈட்டியும் இழுபறி
/
காஞ்சியில் ஜவுளி ஏற்றுமதி மைய பணி...கிடப்பில் :ரூ.300 கோடி வருவாய் ஈட்டியும் இழுபறி
காஞ்சியில் ஜவுளி ஏற்றுமதி மைய பணி...கிடப்பில் :ரூ.300 கோடி வருவாய் ஈட்டியும் இழுபறி
காஞ்சியில் ஜவுளி ஏற்றுமதி மைய பணி...கிடப்பில் :ரூ.300 கோடி வருவாய் ஈட்டியும் இழுபறி
ADDED : பிப் 27, 2025 08:51 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையம் அமையும் என அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் பட்டு தொழிலில் வருவாய் ஈட்டியும் ஏற்றுமதி மையம் அமைக்கப்படாமல் உள்ளது.
தமிழகத்தில் ஜவுளி உற்பத்தி, விற்பனை போன்றவைகளில், காஞ்சிபுரம் மாவட்டம் முக்கிய பங்காற்றி வருகிறது. பட்டு சேலை உற்பத்தி மட்டுமல்லாமல், கைத்தறியில் நெய்யப்படும் லுங்கி, வேட்டி மற்றும் பிற வகையான ஆடைகளும் அதிகளவில் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
எனவே, காஞ்சிபுரத்தில், 'ஜவுளி ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்' என, கடந்த நவ. 2022ல் சென்னையில் நடந்த பன்னாட்டு ஜவுளி கருத்தரங்கில், முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால், காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையம் இதுவரை அமைக்கப்படவில்லை.
ஜவுளி ஏற்றுமதியில் உலக அளவில் தமிழகம் முக்கிய இடத்தை வகிக்கிறது. அதேபோல, ஜவுளித் துறையின் எதிர்காலமும் தொழில்நுட்ப அடிப்படையிலான உற்பத்தியை சார்ந்தே உள்ளது. ஜவுளித் துறையின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பட்டு சேலை, லுங்கி, வேட்டி என ஜவுளித் துறையின் கைத்தறி ஆடைகள் உற்பத்தியில், காஞ்சிபுரம் முக்கிய பங்கு வகிப்பதால், ஏற்றுமதி மையம் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலை, லுங்கி, வேட்டி போன்ற ஆடைகளை வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை கைத்தறி உற்பத்தியாளர்கள், கூட்டுறவு கைத்தறி சங்கங்கள், நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சிபுரத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைக்கு, வட மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. காஞ்சிபுரம் நகர்ப் பகுதி மட்டுமல்லாமல், சுற்றிய கிராமப்புறங்களில் பட்டு சேலை உற்பத்தியை நம்பி பலர் உள்ளனர்.
தனியார், கூட்டுறவு சங்கங்கள் என, 40,000 நெசவாளர்களும், உப தொழில் செய்வதில் 5,000 பேரும், சாயமிடுதல், உபகரணங்கள், மூலப்பொருட்கள் விற்பனை என, 5,000 பேர் என, 50,000 பேர் இத்தொழிலை மேற்கொள்கின்றனர்.
காஞ்சிபுரத்தில், கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, ஆண்டுக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கும், தனியார் கடைகள் வாயிலாக, 200 கோடி ரூபாய்க்கும் மேல் என, 300 கோடி ரூபாய்க்கு மேலாக, பட்டு சேலை உட்பட ஜவுளி விற்பனை நடக்கிறது.
இவ்வாறு, மிகப்பெரிய அளவிலான ஜவுளி விற்பனை மையமாக, காஞ்சிபுரம் உள்ள நிலையில், ஜவுளி ஏற்றுமதி மையத்தை விரைவில் அமைக்க வேண்டும் என, பட்டு சேலை உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆனால், அறிவிப்பு வெளியாகி, மூன்றாண்டுகள் ஆன நிலையில் இதுவரை இடம் தேர்வு செய்யும் பணிகள் கூட முழுமையடையவில்லை என, நெசவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கைத்தறி மற்றும் துணி நுால் துறையின் முதன்மை செயலராக பணியாற்றிய தர்மேந்திர பிரதாப் யாதவ், '' கீழ்கதிர்பூர் கிராமத்தில் உள்ள பட்டு பூங்கா அமைந்த இடத்திலேயே இந்த மையம் அமைக்க ஆலோசிக்கிறோம்,'' என்றார். ஆனால், அந்த இடத்தையும் இதுவரை உறுதி செய்யவில்லை.
கைத்தறி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ' சென்னையில் உள்ள ஜவுளித்துறை அதிகாரிகள் இந்த பணிகளை மேற்கொள்கின்றனர். ஆனால், ஏற்றுமதி மையம் செய்வதற்கான இடம் தேர்வு பற்றி எந்த தகவலும் இதுவரை இல்லை' என்றனர்.