/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கண்டலேறு அணையில் தண்ணீர் இல்லை ஜூன் மாதம் தருவதாக ஆந்திரா உறுதி
/
கண்டலேறு அணையில் தண்ணீர் இல்லை ஜூன் மாதம் தருவதாக ஆந்திரா உறுதி
கண்டலேறு அணையில் தண்ணீர் இல்லை ஜூன் மாதம் தருவதாக ஆந்திரா உறுதி
கண்டலேறு அணையில் தண்ணீர் இல்லை ஜூன் மாதம் தருவதாக ஆந்திரா உறுதி
ADDED : ஏப் 16, 2024 08:05 PM
சென்னை:கண்டலேறு அணையில் தண்ணீர் இல்லாததால், ஜூன் மாதம் சென்னைக்கு குடிநீர் வழங்குவதாக ஆந்திர அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டத்தில் உள்ள கண்டலேறு அணை 68.03 டி.எம்.சி., கொள்ளளவு உடையது.
இந்த அணையில் இருந்து சென்னையின் தேவைக்கு, ஆண்டுதோறும் 11 டி.எம்.சி., நீரை வழங்க வேண்டும். இதற்காக, தமிழகம்-ஆந்திரா இடையே, கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
அணையில், 11 டி.எம்.சி.,க்கும் அதிகமாகநீர் இருக்கும்போது மட்டுமே, தமிழகத்திற்கு திறக்க வேண்டும். தமிழகத்திற்கு நீர் அனுப்புவதற்குகிருஷ்ணா கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கால்வாய் வாயிலாக, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பாசனம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, கண்டலேறு அணையில் 7.67 டி.எம்.சி., நீர் மட்டுமே உள்ளது. தமிழகத்திற்கு முறைப்படி நீரை பெறுவதற்கு, சென்னை மண்டல நீர்வளத்துறை வாயிலாக, ஆந்திர அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
இதற்காக, பாலாறு வடிநில கோட்ட சிறப்பு தலைமை பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினர்.
அதற்கு ஆந்திர அதிகாரிகள், தற்போது அணையில் போதிய நீர் இருப்பு இல்லை என்றும், ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கினால், சென்னையின் குடிநீர் தேவைக்கு நீர் திறப்பதாக உறுதியளித்துள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும், புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகளில், 7.28 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.
இதை வைத்து, சென்னையின் கோடைகால குடிநீர் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும். எனவே, ஆந்திர அதிகாரிகளின் முடிவை, தமிழக நீர்வளத்துறை ஏற்றுக்கொண்டுள்ளது.

