/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் புறவழிச் சாலை திட்டப் பணி ரூ.37 கோடியில் துவக்கம்
/
உத்திரமேரூர் புறவழிச் சாலை திட்டப் பணி ரூ.37 கோடியில் துவக்கம்
உத்திரமேரூர் புறவழிச் சாலை திட்டப் பணி ரூ.37 கோடியில் துவக்கம்
உத்திரமேரூர் புறவழிச் சாலை திட்டப் பணி ரூ.37 கோடியில் துவக்கம்
ADDED : ஜூலை 10, 2024 11:51 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் நகரில், 40,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். உத்திரமேரூரைச் சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், உத்திரமேரூர் வழியாக செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யாறு, வந்தவாசி மற்றும் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
உத்திரமேரூர் சாலை மிகவும் குறுகியதாக உள்ளதால், காலை மற்றும் மாலை நேரங்களில், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், உத்திரமேரூரில் புறவழிச் சாலை ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று, 2013ம் ஆண்டு சட்டசபை கூட்டத் தொடரின் போது உத்திரமேரூரில் புறவழிச் சாலை அமைக்க, அப்போதைய அ.தி.மு.க., அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இத்திட்டத்திற்காக முதல் கட்டமாக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ஒதுக்கீடு செய்த நிதி போதுமானதாக இல்லை எனக்கூறி, அடுத்தகட்ட பணிகளை தொடர்வதில், வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மெத்தனம் காட்டி வந்தனர்.
இதனால், இத்திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து நம் நாளிதழில் தொடர்ந்து அவ்வப்போது செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், கடந்த ஆண்டு இத்திட்டத்திற்கு புதிய திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசாணைக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து, உத்திரமேரூரில் புறவழிச் சாலை அமைக்க விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 37.08 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து புறவழிச் சாலை பணிக்கான துவக்க விழா, உத்திரமேரூர் ஏ.பி., சத்திரம் சாலை பகுதியில் நேற்று நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பூமிபூஜை விழாவில் பங்கேற்று, பணியை துவக்கி வைத்தார்.
உத்திரமேரூர் தி.மு.க., ஒன்றிய செயலர் ஞானசேகரன், உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் மற்றும் நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் அலகு கோட்ட பொறியாளர் நாராயணன், உதவிக் கோட்ட பொறியாளர் கோவிந்தராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.