/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெசவாளர்களுக்கான 10 சதவீத கூலி உயர்வு... கண்துடைப்பு வாழ்வாதாரத்திற்கு போதாது என புகார்
/
நெசவாளர்களுக்கான 10 சதவீத கூலி உயர்வு... கண்துடைப்பு வாழ்வாதாரத்திற்கு போதாது என புகார்
நெசவாளர்களுக்கான 10 சதவீத கூலி உயர்வு... கண்துடைப்பு வாழ்வாதாரத்திற்கு போதாது என புகார்
நெசவாளர்களுக்கான 10 சதவீத கூலி உயர்வு... கண்துடைப்பு வாழ்வாதாரத்திற்கு போதாது என புகார்
ADDED : ஏப் 28, 2025 10:51 PM

காஞ்சிபுரம், :கைத்தறி துறை மானிய கோரிக்கை அறிவிப்பில், 10 சதவீத கூலி உயர்வு என்பது, ஆண்டுதோறும் வெளியாகும் கண்துடைப்பு அறிவிப்பு என, நெசவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 'கூலி உயர்வால் எங்களுக்கு சில நுாறு ரூபாய் மட்டுமே கூலியாக கிடைக்கும்; இதை வைத்து விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாது' என, நெசவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில், கைத்தறி துறை மானிய கோரிக்கை அறிவிப்பின்போது, நெசவாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 10 சதவீதம்; அடிப்படை கூலி உயர்வு 10 சதவீதம் உயர்த்தப்படும் என, கைத்தறி துறை அமைச்சர் காந்தி அறிவித்தார். இதன் வாயிலாக, தமிழகம் முழுதும், 1.5 லட்சம் நெசவாளர்கள் பயன்பெறுவர் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மானிய கோரிக்கை அறிவிப்பு இம்முறை பெரிய அளவில் கைகொடுக்கும் என எதிர்பா்க்கப்பட்டது. ஆனால், கூலி விவகாரத்தில், ஆண்டுதோறும் வழங்கப்படும் 10 சதவீத கூலி உயர்வு ஏமாற்றம் அளிப்பதாகவும், ஆண்டுதோறும் வெளியாகும் இந்த அறிவிப்பு, ஒரு கண்துடைப்புதான், எந்த வகையிலும் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்காது என, நெசவாளர்கள் குமுறுகின்றனர்.
ஏற்கனவே, பருத்தி ரகங்களுக்கும், பட்டு ரகங்களுக்கும் குறைந்த கூலியே வழங்கப்படுகிறது. பல கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு பணியும் சரிவர வழங்கப்படுவதில்லை
இதில், 10 சதவீத கூலி உயர்வு என்பது, நெசவாளர்களின் வருமானத்தை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதில் பல கேள்விகளை எழுப்புவதாக, காஞ்சிபுரம் நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் நெசவாளர்கள் கூறியதாவது:
காஞ்சிபுரத்தில், பருத்தி மற்றும் பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்கள், 50 எண்ணிக்கையில் உள்ளன. இவற்றில், 30,000த்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக இருந்தாலும், 10,000 பேர்தான் இன்றும் தொடர்ந்து நெசவு பணியில் ஈடுபடுகின்றனர்.
ஏற்கனவே, கைத்தறி சங்கங்களில் முறையாக பணி வழங்குவதில்லை. முறைகேடுகள் நடப்பதால் நெசவாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது.
தற்போது, கூலி உயர்வும் போதுமானதாக இல்லை. கைத்தறி துறை அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது.
அடிப்படை கூலியும், அகவிலைப்படி உயர்வும், நடைமுறையில் கணக்கிடும்போது, நெசவாளர்களுக்கு ரகத்திற்கு ஏற்ப சில நுாறு ரூபாய் மட்டுமே கிடைக்கும்.
இதை வைத்து, நாங்கள் காய்கறி கூட வாங்க முடியாது. இன்றைய காலத்தில், மருத்துவ செலவு, பள்ளி கட்டணம், மளிகை, பால் என அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை தொட்டுள்ளது.
நாள் முழுதும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து உழைத்தாலும், 8,000 -- 10,000 ரூபாய் வரை கூலி பெற போராட வேண்டியுள்ளது.
கூலி உயர்வு என்பது 20 சதவீதமாக உயர்த்தியிருக்க வேண்டும். சங்கங்கள் இந்த உயர்த்தப்பட்ட கூலியை வழங்க முடியவில்லை என்றால், அதற்கான கூடுதல் செலவினங்களை அரசு ஏற்க வேண்டும்.
மழைக்காலத்தில், நெசவாளர்களுக்கு உதவித்தொகை தருவதாக, மாவட்ட அளவிலான தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை உதவித்தொகை ஏதும் வழங்கப்படவில்லை. நெசவாளர்களுக்கு ஏமாற்றம் என்பது, பழகி போனதாகிவிட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பட்டு சேலை ரகத்திற்கான அடிப்படை கூலியாக 10 சதவீதம் உயர்த்தினால், சில நுாறு ரூபாய் மட்டுமே நெசவாளர்களுக்கு கிடைக்கும். இன்றைய விலைவாசி உயர்வுக்கு இந்த கூலி உயர்வு எந்த வகையிலும் போதாது. நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயர்த்த கூலி உயர்வு கணிசமாக இருக்க வேண்டும்.
- எஸ்.வி.சங்கர்,
ஏ.ஐ.டி.யு.சி.,
தலைவர்,
காஞ்சிபுரம்
கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு வரையறுக்கப்பட்ட கூலியும், ஆண்டுதோறும் கூலி உயர்வு என்பது உள்ளது. ஆனால், தனியார் நெசவாளர்களுக்கு உற்பத்தியாளர்கள் இஷ்டத்துக்கு வழங்கப்படும் கூலியே இறுதியானது. கூலி விவகாரத்தில் தனியார் நெசவாளர்களுக்கு வரையறையே இல்லை. சங்கங்களுக்கும், தனியார் நெசவாளர்களுக்கும் கூலி உயர்வுக்கு கமிட்டி ஒன்றை அமைத்து நிர்ணயம் செய்ய வேண்டும்.
- ஆர்.ரவி,
நெசவாளர்,
காஞ்சிபுரம்.