/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
100 நாள் பணியாளர்களுக்கு 9 வார கூலி கிடைக்கல: கிராமங்களில் வளர்ச்சி பணிகள் பாதிக்கும் அபாயம்
/
100 நாள் பணியாளர்களுக்கு 9 வார கூலி கிடைக்கல: கிராமங்களில் வளர்ச்சி பணிகள் பாதிக்கும் அபாயம்
100 நாள் பணியாளர்களுக்கு 9 வார கூலி கிடைக்கல: கிராமங்களில் வளர்ச்சி பணிகள் பாதிக்கும் அபாயம்
100 நாள் பணியாளர்களுக்கு 9 வார கூலி கிடைக்கல: கிராமங்களில் வளர்ச்சி பணிகள் பாதிக்கும் அபாயம்
ADDED : பிப் 05, 2025 08:26 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மத்திய அரசு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தி வருகிறது.
இந்த ஊராட்சிகளில், 1.28 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த, 1.98 லட்சம் பேர் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். இதில், 1.45 லட்சம் பேருக்கு, 100 நாள் வேலைக்குரிய வருகை பதிவேடு புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
வாரத்திற்கு ஆறு நாட்கள் என, சுழற்சி முறையில், 100 நாள் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படுகின்றன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40,918 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில், 70,000 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில், 71,000 பேர் என, 1.81 லட்சம் பணியாளர்களுக்கு, 100 நாள் வேலை வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு, கடந்தாண்டு நவம்பர் மாத இறுதி வாரத்தில் இருந்து, தற்போது வரை, ஒன்பது வாரங்களுக்கு கூலி கிடைக்கவில்லை. அதேபோல், வீடு கட்டுதல், சாலை அமைத்தல், குளம் வெட்டும் பணி செய்யும் பயனாளிகளுக்கு சேர வேண்டிய கூலியும் கிடைக்கவில்லை என, பணியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
'கிளஸ்டர்' என அழைக்கப்படும் குழுவிற்கு, மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் மட்டுமே, 100 நாள் வேலைக்கு வர வேண்டும் என, கடந்த மாதம் தகவல் வெளியானது. இது, பெரிய பிரச்னையாகிவிடும் என்பதால், வழக்கமான பணியாளர்களின் எண்ணிக்கையுடன் ஜனவரி மாதம் பணி நடந்தது.
இந்த பணியில் ஈடுபட்டோருக்கு சரியாக கூலி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கூலி வழங்காத காரணத்தால், பல்வேறு கிராமங்களில் சரிவர களப்பணி மேற்கொள்ளாமல், பணியாளர்கள் பலரும் அரைகுறையாக பணி செய்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் நிறைவு பெற்ற நிலையில், அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என, அம்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் புலம்புகின்றனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் நீடிக்கும் நிலையில், ஊராட்சி தலைவர்களிடம் பணியாளர்கள் முறையிடுகின்றனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரி கூறியதாவது:
நூறு நாள் திட்ட ஊதிய பிரச்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் கிடையாது. அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும், 100 நாள் தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை. மாநில ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி, 100 நாள் பணியாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கி வருகிறோம்.
ஊராட்சிகளில் பணிபுரிவோரின் தினசரி வருகை பதிவேட்டை பதிவேற்றம் செய்து வருகிறோம். அதற்குரிய ஊதியம் மத்திய அரசு, மாநில அரசிற்கு விடுவித்த பின், அவரவர் வங்கி கணக்கிற்கு பணம் சென்றுவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.