/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
2.5 கிலோவுக்கு குறைவாக 1,027 குழந்தைகள் பிறப்பு...அதிர்ச்சி!:5,492 கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகை கண்டுபிடிப்பு
/
2.5 கிலோவுக்கு குறைவாக 1,027 குழந்தைகள் பிறப்பு...அதிர்ச்சி!:5,492 கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகை கண்டுபிடிப்பு
2.5 கிலோவுக்கு குறைவாக 1,027 குழந்தைகள் பிறப்பு...அதிர்ச்சி!:5,492 கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகை கண்டுபிடிப்பு
2.5 கிலோவுக்கு குறைவாக 1,027 குழந்தைகள் பிறப்பு...அதிர்ச்சி!:5,492 கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகை கண்டுபிடிப்பு
ADDED : செப் 18, 2024 12:00 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்தாண்டு பிறந்த 17,422 குழந்தைகளில், 1,027 குழந்தைகள், இரண்டரை கிலோவுக்கும் குறைவான எடை கொண்டதாக பிறந்துள்ளது. அதேபோல, கடந்தாண்டு சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில், 5,492 கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை இருந்தது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சுகாதாரத் துறை சார்பில், தாய் சேய் நல விவகாரங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள மட்டுமல்லாமல், அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள ஊழியர்களும் கர்ப்பிணிகளின் உடல் நலனை கண்காணிக்கின்றனர்.
கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ, பிரசவத்திற்கு சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்வது வாடிக்கை. இருப்பினும், அவர்களை செவிலியர்கள் வாயிலாக சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.
கர்ப்பிணியின் எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் போன்ற விபரங்களை தொடர்ந்து சரி பார்க்கின்றனர்.
சுகாதாரத் துறை தொடர்ந்து நடத்திய ஆய்வில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்தாண்டு மட்டும் 17,422 கர்ப்பிணிகள் குழந்தை பெற்றுக் கொண்டனர்.
கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கும், முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு உதவித்தொகை திட்டத்தில், 17,000 பேர் பதிவு செய்துள்ளனர். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கர்ப்பிணிகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், 5,492 தாய்மார்கள் ரத்த சோகையுடன் இருந்தது தெரியவந்துள்ளது. இதில், பிரசவ நேரத்தில் அதிக ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக, 4,333 தாய்மார்கள் உயர் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
பரிந்துரை செய்யப்பட்ட தாய்மார்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குழந்தை பிரசவிக்கின்றனர்.
ரத்தசோகை கண்டறியப்பட்ட, 4,000க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு, அரசு சார்பில், இரும்பு சத்து மாத்திரைகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. பொதுவாக பெண்களுக்கு, ரத்தத்தில் 11 என்ற அளவுக்கு மேலாக ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். அதற்கும் குறைவாக இருப்பின் ரத்தசோகைக்கான மாத்திரைகளை, மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ரத்தசோகை இருக்கும் கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என, மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதில், எடை குறைவாக குழந்தைகள் பிறக்கும் என்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்தாண்டு பிறந்த 17,422 குழந்தைகளில், 1,027 குழந்தைகள், இரண்டரை கிலோவுக்கும் குறைவாக பிறந்துள்ளது. இது மொத்த குழந்தைகளில் 6 சதவீதமாகும்.
மாவட்டத்தில் பிறந்த மொத்த குழந்தைகளில், 8,543 பெண் குழந்தைகளும், 8,879 ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளன. இதில், பல்வேறு காரணங்களால், 104 குழந்தைகள் இறந்துள்ளன. அதேபோல, ஏழு கர்ப்பிணிகளும் இறந்துள்ளனர்.
இதுபோல, தாய், சேய் நலம் குறித்து செவிலியர், மகப்பேறு மருத்துவர்கள் அந்தந்த பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக பல்வேறு அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.
இருப்பினும், தாய்மார்களுக்கு போதிய விழிப்புணர்வு இன்றி, உணவு பழக்கம் முறையாக கடைபிடிக்காதது, ஏற்கனவே உள்ள உடல் பிரச்னைகள், மரபு ரீதியான பிரச்னைகள் போன்ற காரணங்களால், தாய், சேய் நலத்தில் இதுபோல பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன.
குழந்தைகள் எடை குறைவாக பிறப்பது பற்றி மகப்பேறு மருத்துவர் ஒருவர் கூறியதாவது:
தாய்க்கு ரத்தசோகை, ரத்த அழுத்தம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. பனிக்குடத்தில் தண்ணீர் குறைவாக இருந்தாலும், குழந்தைக்கு இதய பிரச்னை போன்ற பிரச்னைகள் இருந்தாலும் குழந்தை எடை குறைவாக இருக்கும். இதுமட்டுமல்லாமல், தாய்க்கு உடல் ரீதியாக ஏற்கனவே இருக்கும் பல காரணங்களால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எடை குறைவாக பிறக்க பல காரணங்கள் உள்ளன.
இந்தியாவில் உள்ள பரவலான பிரச்னையாக ரத்தசோகை உள்ளது. அதை சரி செய்ய, அரசு மருத்துவமனைகளில், இரும்புச்சத்து மாத்திரைகளை இலவசமாகவே வழங்குகின்றனர். பிங்க் நிறத்தில் வழங்கப்படும் இந்த மாத்திரை மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கு தொடர்ந்து வழங்குவர்.
தாய்மார்கள் விழிப்புணர்வோர் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை பெரும்பாலான தாய்மார்கள் சாப்பிடுவதில்லை. அதற்கான இணை உணவுகளை அங்கன்வாடிகளில் வழங்குகின்றனர். அவற்றையும் சாப்பிட வேண்டும். ரத்தசோகையை சரி செய்தாலே பெரும்பாலான பிரச்னை குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.