/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
15 கலைஞர்கள் விருது வழங்கி கவுரவிப்பு
/
15 கலைஞர்கள் விருது வழங்கி கவுரவிப்பு
ADDED : ஆக 25, 2025 11:34 PM

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரத்தில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடந்த கலைத் திருவிழாவில், தெருக்கூத்து, நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட 15 கலைஞர்களுக்கு, கைத்தறி துறை அமைச்சர் காந்தி விருது வழங்கி கவுரவித்தார்.
தமிழக கலை பண்பாட்டு துறை சார்பில் சென்னை மற்றும் தமிழகதின் எட்டு நகரங்களில், சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக காஞ்சி புரம் கலெக்டர் வளாகத்தில் இந்நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
கிராம நடனம், கரகம் என பல வகையிலான நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க., - -எம்.பி., செல்வம், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், மேயர் மகாலட்சுமி, கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குனர் ஹேமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கலையில் சாதனை படைத்ததாக, நாடக கலைஞர் சண்முகம், வீணை கலைஞர் ரங்கராஜன், கைச் சிலம்பாட்ட கலைஞர் முனுசாமி ஆகியோருக்கு கலை முதுமணி விருது, தெருக்கூத்து கலைஞர் பாபு, நாதஸ்வர கலைஞர் சுப்ரமணியம், புலியாட்ட கலைஞர் தேவராஜ் ஆகியோருக்கு கலை நன்மணி விருது, கைத்தறி துறை அமைச்சர் காந்தி வழங்கினார்.
மேலும், வில்லிசை கலைஞர் முருகன், தவில் கலைஞர் சண்முக முரளி, ஓவிய கலைஞர் கீதா ஆகியோருக்கு கலை சுடர்மணி விருது, தெருக்கூத்து கலைஞர் நந்தகுமார், பம்பை கலைஞர் மணிகண்டன், பரதநாட்டிய கலைஞர் ஜெயலட்சுமி ஆகியோருக்கு கலை வளர்மணி விருது வழங்கினார்.
கைச் சிலம்பாட்ட கலைஞர் சிவசெல்வன், குரலிசை கலைஞர் சபரீஷ்வர், சிலம்பாட்ட கலைஞர் ஷாலினி ஆகியோருக்கு கலை இளமணி விருது என, 15 பேருக்கு விருது மற்றும் காசோலைகளையும் அமைச்சர் காந்தி வழங்கினார்.