/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செங்கையில் இந்தாண்டு 20 மான்கள் பலி: வனத்துறை மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு
/
செங்கையில் இந்தாண்டு 20 மான்கள் பலி: வனத்துறை மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு
செங்கையில் இந்தாண்டு 20 மான்கள் பலி: வனத்துறை மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு
செங்கையில் இந்தாண்டு 20 மான்கள் பலி: வனத்துறை மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு
ADDED : டிச 16, 2025 06:08 AM

- நமது நிருபர் குழு -: செங்கல்பட்டு மாவட்டத்தில், காப்புக்காடுகளில் வசிக்கும் மான்கள் அடிக்கடி வெளியேறி சாலைக்கு வந்து, வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்தும், பிளாஸ்டிக் கழிவுகளை உண்டும் உயிரிழப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டில், 20க்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழந்துள்ள நிலையில், வனத்துறை மெத்தனமாக செயல்படுவது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுாரில் 2,896 ஏக்கர் பரப்பிலும், கூடலுார், குமுளி, ஊனமாஞ்சேரி ஆகிய இடங்களில் முறையே 2,728, 1,205, 410 ஏக்கர் பரப்பிலும், அடர்ந்த காப்புக் காடுகள் உள்ளன. இவை தமிழக அரசின் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
இங்கு 1,500க்கும் மேற்பட்ட மான்கள் வசித்து வருகின்றன. பரப்பில் பெரிய வண்டலுார் காப்புக் காட்டில் மட்டும், 1,000க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காப்புக் காட்டைச் சுற்றிலும், பாதுகாப்பு வேலி மற்றும் சுற்றுச்சுவர் இல்லை.
இதனால், மான்கள் அவ்வப்போது வழி தவறி, ஊருக்குள் புகுந்து விடுகின்றன. பின், வனத்துறை ஊழியர்கள் அவற்றை மீட்டு, மீண்டும் காப்புக் காட்டிற்குள் விடுவது வழக்கமான நிகழ்வாக உள்ளது.
இந்நிலையில், காப்புக் காட்டிலிருந்து வெளியேறும் மான்கள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை உண்டு ஜீரணமாகாமல் உயிரிழப்பதும், தெரு நாய்கள் கடித்து பலியாவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, விலங்கு ஆர்வலர்கள் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலுார், கூடலுார், ஊனமாஞ்சேரி, குமுளி ஆகிய நான்கு ஊராட்சிகளில், 7,240 ஏக்கர் பரப்பில் உள்ள காப்புக் காடுகள், முறையாக பராமரிக்கப்படவில்லை. காப்புக் காடுகளின் கரை பகுதியில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.
மான்கள் நீர் பருகவும், பசியை போக்கவும், காடுகளிலிருந்து அடிக்கடி கூட்டமாக வெளியேறுவது, சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இவ்வாறு வெளியேறும் மான்களில் சில, வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்தும் உயிரிழப்பது தொடர்கிறது.
கடந்த 12ம் தேதி, வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில், சாலையைக் கடந்த மான், 'மாருதி சுவிப்ட்' காரில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே பலியானது. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்தாண்டில் மட்டும், 20க்கும் மேற்பட்ட மான்கள் பலியாகி இருக்கலாம்.
இதை தடுக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், மான்கள் உயிரிழப்பு தினமும் அரங்கேறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

