/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரத்தில் 9 ஆண்டுகளில் மழை, வெள்ளத்தால் 218 பேர் பலி
/
காஞ்சிபுரத்தில் 9 ஆண்டுகளில் மழை, வெள்ளத்தால் 218 பேர் பலி
காஞ்சிபுரத்தில் 9 ஆண்டுகளில் மழை, வெள்ளத்தால் 218 பேர் பலி
காஞ்சிபுரத்தில் 9 ஆண்டுகளில் மழை, வெள்ளத்தால் 218 பேர் பலி
ADDED : அக் 28, 2024 11:42 PM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், மழை, வெள்ளம், இடி, மின்னல் போன்ற காரணங்களால், 9 ஆண்டு களில் மட்டும் 218 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டத்தில் ஏரி, ஆறுகளில் நீர்வரத்து துவங்கியுள்ள நிலையில், குளிக்கவோ, 'செல்பி' எடுக்கவோ வேண்டாம் என, பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் எச்சரிக்கை தெரிவிக்கின்றனர்.
வடகிழக்கு பருவமழை வட மாவட்டங்களில் ஒன்றான காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் இயல்பை காட்டிலும் கூடுதலாகவே பெய்து வருகிறது.
பருவமழை
இந்தாண்டும் இயல்பை காட்டிலும் கூடுதலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய பருவமழை காலங்களில், பொதுமக்கள் கவனமாக இருக்க, பேரிடர் மேலாண்மை துறை தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கின்றனர்.
அதிக நீர்நிலைகள் கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்திலும், செம்பரம்பாக்கம், மணிமங்கலம், ஸ்ரீபெரும்புதுார், தாமல் போன்ற பெரிய ஏரிகள் நிரம்புகிறது. பாலாற்றிலும் மெல்ல தண்ணீர் செல்கிறது. அதேபோல, திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வரும் செய்யாற்றிலும், தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது.
இதுபோல, ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகள் தொடர்ந்து நிரம்பி வருவதால், பொதுமக்கள் பலரும் நீர்நிலைகளில் குளிக்கவும், செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வாறு, நீர்நிலைகளில் கவனக்குறைவாக இறங்கியவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
நீர்நிலைகளில் சிக்கியது மட்டுமல்லாமல், மழையுடன் இடி மின்னல் ஏற்படும்போது, வயல் வெளிப்பகுதியில் தனியாக செல்வது, மரத்தடியில் நிற்பது போன்ற காரணங்களாலும் இடி, மின்னல் தாக்கி உயிரிழக்கின்றனர்.
மழைக்காலங்களில், மின்கம்பங்களில் மின் கசிவு காரணமாகவும், அறுந்து விழுந்த மின் கம்பிகளை மிதிப்பதாலும் பலர் உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அதுபோல பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன.
கடந்த வாரம், காஞ்சிபுரத்திலும், உத்திரமேரூரிலும் இருவர் மின்சாரம் தாக்கி இறந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2015ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது, 165 பேர் நீர்நிலைகளில் அடித்து செல்லப்பட்டும், ஏரியில் மூழ்கியும், இடி, மின்னல் தாக்கியும் இறந்திருக்கின்றனர்.
அதேபோல், 2016ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது ஏற்பட்ட வர்தா புயல் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், 16 பேர் இறந்தனர். இதுமட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன.
அடுத்து வந்த ஆண்டுகளிலும், தென்மேற்கு பருவமழைக்கும், வடகிழக்கு பருவமழைக்கும் பலர் உயிரிழந்துள்ளனர். 2015ம் ஆண்டு முதல், 2024 அக்டோபர் மாதம் வரை, 218 பேர் மழை, வெள்ளம், மின்சாரம், இடி, மின்னல் போன்ற காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.
எச்சரிக்கை
அதேபோல, 8 பேர் காயமடைந்துள்ளனர். இந்தாண்டுக்கான வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், நீர்நிலைகளில், ஆற்றில் குளிக்கவோ, ஏரியில் இறங்கவோ கூடாது என, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது:
தொடர்ந்து மழை சம்பந்தமான எச்சரிக்கை கொடுத்து வருகிறோம். ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகளில் யாரும் இறங்கக்கூடாது. குறிப்பாக, நீர்நிலைகளில் குழந்தைகள் விளையாடுகின்றனரா என, பெற்றோர் கண்காணித்து உறுதிபடுத்த வேண்டும்.
வானிலை ஆய்வு மையம், இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கும்போது, மரத்தடியில் நிற்க கூடாது. இடி தாக்கும் அபாயம் உள்ளது. அதேபோல், மின் பிரச்னை உள்ள கம்பங்களை சரிசெய்ய மின்சார வாரியத்திற்கும் அறிவுரை வழங்கியிருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.