/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
10ம் வகுப்பு தேர்வு முடிவில் 2.73 சதவீத தேர்ச்சி...குறைந்தது!: 25லிருந்து 32வது இடத்திற்கு சென்ற காஞ்சிபுரம்
/
10ம் வகுப்பு தேர்வு முடிவில் 2.73 சதவீத தேர்ச்சி...குறைந்தது!: 25லிருந்து 32வது இடத்திற்கு சென்ற காஞ்சிபுரம்
10ம் வகுப்பு தேர்வு முடிவில் 2.73 சதவீத தேர்ச்சி...குறைந்தது!: 25லிருந்து 32வது இடத்திற்கு சென்ற காஞ்சிபுரம்
10ம் வகுப்பு தேர்வு முடிவில் 2.73 சதவீத தேர்ச்சி...குறைந்தது!: 25லிருந்து 32வது இடத்திற்கு சென்ற காஞ்சிபுரம்
ADDED : மே 11, 2024 12:43 AM

காஞ்சிபுரம்:பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதில், காஞ்சிபுரம் மாவட்டம் 2.73 சதவீதம் குறைந்து, 87.55 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மாநில அளவில் 25வது இடத்திலிருந்து 32வது இடத்திற்கு பின்தங்கியதால், கல்வித்துறையினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழகம் முழுதும் நேற்று வெளியிடப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாணவ - மாணவியர் தங்களின் தேர்வு முடிவுகள், மதிப்பெண் விபரங்களை மொபைல் போன்களில் ஆர்வத்துடன் பார்த்து தெரிந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 183 பள்ளிகளைச் சேர்ந்த, 8,013 மாணவர்களும், 7,772 மாணவியர் என, மொத்தம் 15,785 பேர் தேர்வில் பங்கேற்றனர்.
இதில், 13,819 மாணவ - மாணவியர் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுஉள்ளனர். இது, 87.55 சதவீதமாகும். கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 92.28 ஆக இருந்தது.
கடந்தாண்டைக் காட்டிலும், 2.73 சதவீதம் இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்திருப்பது, கல்வித்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் 83.05 சதவீதமும், மாணவியர் 92.18 சதவீதமும் தேர்ச்சியடைந்து உள்ளனர். மாணவர்களை காட்டிலும், மாணவியர் 9.13 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மாவட்ட வாரியான தரவரிசையில், 32வது இடத்தை காஞ்சிபுரம் பெற்றுள்ளது. கடந்தாண்டு 25வது இடத்தில் இருந்தது. நடப்பாண்டில் எட்டு இடங்கள் பின்தங்கியுள்ளது.
அரசு பள்ளிகளை பொறுத்தவரையில், 100 பள்ளிகள் 10ம் வகுப்பு தேர்வில் பங்கேற்றன. இதில், 8,896 மாணவ - மாணவியர் தேர்வில் பங்கேற்றதில், 7,440 மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 83.63 சதவீத தேர்ச்சியாகும்.
மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவியரில், முதல் 10 இடங்களையும் தனியார் பள்ளி மாணவர்களே பெற்றுள்ளனர். முதல் 10 இடங்களில், அரசு பள்ளி மாணவர்கள் யாரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
29 பள்ளிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 183 பள்ளிகள் 10ம் வகுப்பில் பங்கேற்றன. இதில், இரண்டு அரசு பள்ளிகள் உட்பட 29 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
அரசு பள்ளிகளில், தண்டலம் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியும், உமையாள் பரணச்சேரி அரசு உயர்நிலைப்பள்ளி என, இரு அரசு பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
மற்ற 27 பள்ளிகளும் தனியார் பள்ளிகளாகும். கடந்தாண்டு 42 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு 29 பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
அதேபோல், கடந்த ஆண்டு 8 அரசு பள்ளிகள் 100 சதவீதம் பெற்ற நிலையில், இம்முறை 2 பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளன.
8 அரசு பள்ளிகள் மோசம்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை கல்வித்துறை அதிகாரிகள் பார்த்தபோது, பல அரசு பள்ளிகள், 70 சதவீதம் தேர்ச்சி கூட பெற முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.
ஊத்துக்காடு வி.எஸ்.ஏ., அரசு உயர்நிலைப் பள்ளி, 68.8 சதவீதமும், காஞ்சிபுரம் அரசு காது கேளாதோர் பள்ளி வெறும் 12 சதவீதமும், படப்பை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 66.0 சதவீதமும் பெற்றுள்ளன.
திருமுடிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி 66.1 சதவீதமும், கோவூர் அரசு மேல்நிலைப் பள்ளி 68.2 சதவீதமும், பிச்சிவாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி 44 சதவீதமும், செங்காடு அரசு பள்ளி 37.5 சதவீதமும், மாங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 62.2 சதவீத தேர்ச்சி மட்டுமே பெற்றுள்ளன.
இதில், அரசு காது கேளாதோர் பள்ளியில் வெறும் 8 பேர் மட்டுமே பயிலும் நிலையில், ஒருவர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார்.
அதேபோல், பிச்சிவாக்கம் பள்ளியில் வெறும் 29 மாணவர்களும், செங்காடு பள்ளியில் 8 மாணவர்களும் மட்டுமே தேர்வெழுதினர். இவ்வளவு குறைவான எண்ணிக்கை கொண்ட மாணவர்களை, 100 சதவீத தேர்ச்சி பெற வைக்க முடியாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது.
ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு, பெற்றோரின் ஊக்குவிப்பால், 10ம் வகுப்பு தேர்வில் 474 மதிப்பெண் எடுத்துள்ளேன். பிளஸ் 1ல் வணிகவியல் பாடப்பிரிவு எடுக்க உள்ளேன். 'சாட்டர்ட் அக்கவுன்டன்ட்' ஆவது என் விருப்பம்.
- மு.லோகப்பிரியா,
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
ஸ்ரீபெரும்புதுார்.
என் தந்தை இரு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். என் தாய், பெட்டிக் கடை நடத்தி என்னை படிக்க வைக்கிறார். 10ம் வகுப்பு தேர்வில் 382 மதிப்பெண் பெற்றுள்ளேன். முதல் குரூப் எடுத்து, டாக்டராக வேண்டும் என்பது என்பது என் லட்சியம்.
- ஏ.மரியஜெர்சி,
சிங்காடிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.
எனக்கு பார்வைக் குறைபாடு 80 சதவீதம் இருந்தாலும், 10ம் வகுப்பு தேர்வில், 477 மதிப்பெண் எடுக்க முடிந்தது. ஆசிரியர்கள், பெற்றோர், மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். பட்டய கணக்காளர் ஆக வேண்டும் என்பது என் விருப்பம்.
- வா.மதன்,
கலெக்டர் காலனி அரசு உயர்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்.
எனக்குள் இருக்கும் செவி குறைபாடு பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் படித்தேன். நன்றாக மதிப்பெண் பெற முடிந்தது. பிளஸ் 1ல் கணக்குப்பதிவியல் படித்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியை ஆவதே லட்சியம்.
- -ஆ.பிரீத்தி,
காது கேளாதோர் பள்ளி, சதாவரம், காஞ்சிபுரம்.