/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வட்டார வள மையங்களில் 28 காலி பணியிடம் கூடுதல் பணிச்சுமையால் பணியாளர்கள் அவதி
/
வட்டார வள மையங்களில் 28 காலி பணியிடம் கூடுதல் பணிச்சுமையால் பணியாளர்கள் அவதி
வட்டார வள மையங்களில் 28 காலி பணியிடம் கூடுதல் பணிச்சுமையால் பணியாளர்கள் அவதி
வட்டார வள மையங்களில் 28 காலி பணியிடம் கூடுதல் பணிச்சுமையால் பணியாளர்கள் அவதி
ADDED : பிப் 11, 2025 12:37 AM
உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இடங்களில், வட்டார வள மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் வாயிலாக, மாவட்டம் முழுதும் அனைவருக்கும் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கல்வித்துறையில் அறிமுகப்படுத்தப்படும் புதிய செயல்திட்டங்கள் குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தும், அனைத்து பள்ளிகளுக்கும் கற்றல் தொடர்பான செயல்முறை பயிற்சி புத்தகங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
சிரமம்
தொடர்ந்து, பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து, புள்ளி விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டார வள மையங்களில், மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர் உட்பட, 47 பணியிடங்கள் உள்ளன. ஆனால், தற்போது, 19 பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
போதிய அளவுக்கு பணியாளர்கள் இல்லாததால், அலுவலக பணி மற்றும் களப்பணி செய்ய முடியாமல் பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அந்தந்த, வட்டார வள மையங்களில் உள்ள பணியாளர்கள், அவ்வப்போது வேறொரு மையங்களிலும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புள்ளி விபரம்
இதனால், பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து, புள்ளி விபரங்களை சேகரிப்பது, பணியாளர்களுக்கு பெரும் சாவலாக உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கிராமப்புற மாணவர்களில் சிலர் குடும்ப சூழல் காரணமாக, பள்ளிக்கு செல்லாமல் இடையில் நின்று ஹோட்டல், ஜவுளி கடை ஆகியவற்றுக்கு வேலைக்குச் செல்கின்றனர். இதைத் தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
நடவடிக்கை
ஆனால், பள்ளியில் இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க போதிய பணியாளர்கள் இல்லாமல் உள்ளனர்.
மேலும், குழந்தைகள் படித்து நல்ல நிலைக்கு வரமுடியாமல், சிறு வயதிலேயே வேலைக்கு செல்லும் அவலநிலை உள்ளது.
இந்த நிலை மாற அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து வட்டார வள மைய அலுவலர் ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டார வள மையங்களில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால், அலுவலக பணியோடு களப்பணியும் சேர்த்து செய்வதால், கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.
ஒவ்வொரு வட்டாரத்திற்கும் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய, சிறப்பு பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
அடிக்கடி பணி செய்யும் இடத்தில் இருந்து, வேறொரு இடத்திற்கு தற்காலிக பணியில் ஈடுபடுத்துவதால், கடும் பணிச்சுமையை பணியாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.