/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புயலால் நீரில் மூழ்கி நெற்பயிர் நாசம் 3,067 ஏக்கர்!:மின்சாரமின்றி 10 கிராமத்தினர் அவதி
/
புயலால் நீரில் மூழ்கி நெற்பயிர் நாசம் 3,067 ஏக்கர்!:மின்சாரமின்றி 10 கிராமத்தினர் அவதி
புயலால் நீரில் மூழ்கி நெற்பயிர் நாசம் 3,067 ஏக்கர்!:மின்சாரமின்றி 10 கிராமத்தினர் அவதி
புயலால் நீரில் மூழ்கி நெற்பயிர் நாசம் 3,067 ஏக்கர்!:மின்சாரமின்றி 10 கிராமத்தினர் அவதி
ADDED : டிச 02, 2024 03:30 AM

காஞ்சிபுரம்:'பெஞ்சல்' புயலால் காஞ்சிபுரம் மாவட்டத்தில், 3,067 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி நாசமடைந்தது. மேலும், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்போர், மூன்று நாட்களாக மின்சாரமின்றி அவதிப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'பெஞ்சல்' புயல் காரணமாக, நேற்று முன்தினம் அதிகாலையில் இருந்து, மழை பெய்ய துவங்கியது. மாவட்டம் முழுதும், இடைவிடாமல் மழை பெய்ததால், பிரதான சாலைகளில், மழைநீர் வெள்ளம்போல சூழ்ந்திருந்தன.
மழை, வெள்ளம் பாதிக்கும், 72 இடங்களில், 21 மண்டல குழு அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களுக்கு, உடனடி தீர்வுக்கு சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டு வந்தன.
மாவட்டத்தில், தாழ்வான இடங்களில் வசிக்கும், 170 குடும்பங்களைச் சேர்ந்த, 564 பேரை, 31 நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.
இவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, பாய், தலையணை போன்றவை வழங்கப்பட்டுள்ளன. குன்றத்துார் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் வசிப்போரை மீட்க, 20 படகுகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
மழையால், காஞ்சிபுரம் அடுத்த, ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர் துணை மின் நிலையத்தில் இருந்து, வினியோகம் செய்யப்படும் மின்சாரம், கொட்டவாக்கம், போந்தவாக்கம், சாமந்திபுரம், மூலப்பட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், மூன்று நாட்களாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலை முதல், படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல, அய்யன்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து சப்ளையாகும் மின்சாரம், வில்லிவலம் கிராமத்தில் மூன்று தினங்களாக மின் சப்ளை அறவே இல்லை. கிராம மக்கள் அளித்த புகாரின் படி நேற்று, 4:00 மணிக்கு பிறகு மின் சப்ளை வழங்கப்பட்டது.
இருப்பினும், இரு தினங்களாக மின் சாதனப் பொருட்களை இயக்க முடியாமலும், மின் மோட்டார்கள் இயங்காததால், குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. சம்பா பருவத்தில் நடவு செய்த நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தன.
நவரை பருவத்திற்கு உழவு ஓட்டிய நிலங்களில், மழைநீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டு ஓரிக்கை, நேரு நகரில், 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சிமென்ட் சாலை சேதமடைந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் இரு நாட்களாக பெய்த மழையால், வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்தசரஸ் தெப்பகுளத்தில், அத்திவரதர் சயன நிலையில் உள்ள மண்டபத்தின் கோபுரத்தின் அடிப்பாகம் வரை குளம் நிரம்பியுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி உப்புகுளம் பகுதியில், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
படுநெல்லியில், சீமைக்கருவேல மரம் வேருடன் சாய்ந்து, கூரை வீடு அருகே விழுந்துள்ளது. கொட்டவாக்கத்தில், தேக்கு மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன.
உத்திரமேரூர் அடுத்த, ஆணைப்பள்ளம், திருப்புலிவனம், கருவேப்பம்பூண்டி ஆகிய இடங்களில், மா, புளியன் உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. எம்.ஜி.ஆர் நகரில், மின் கம்பங்கள் சாய்ந்தன.
உத்திரமேரூர் ஒன்றியத்தில் மட்டும் நிவாரண முகாம்களில், 275 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆதவப்பாக்கம் மழை நிவாரண முகாமில் நடந்த மருத்துவ முகாமில், காய்ச்சலை தடுக்க, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
குன்றத்துார் அருகே, வரதராஜபுரம், பி.டி.சி., நகர், புவனேஸ்வரி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. முடிச்சூர் - வரதராஜபுரம் பகுதியினர் வெள்ள நீர் சூழும் அச்சத்தால், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலத்தில் கார்களை நிறுத்தி வைத்திருந்தனர்.
வண்டலுார்- - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் படப்பை பஜார் பகுதியில் ஐந்து நாட்களுக்கு முன் புதிதாக அமைத்த தார் சாலை, கன மழையால் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
உத்திரமேரூர் தாலுகா, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாழ்வான பகுதியில் வசித்து வந்த பழங்குடியினர் 16 பேரை, வருவாய் துறையினர் மீட்டு, ஆலப்பாக்கம் அங்கன்வாடி மைய முகாமில் தங்க வைத்துள்ளனர்.
உத்திரமேரூர் பேரூராட்சி, எம்.ஜி.ஆர் நகரில் மின் கம்பம் சாய்ந்தது. உயிர் சேதம் ஏற்படுவதை தவிர்க்க, முன்னெச்சரிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல் வயல்களில், மழைநீர் வெளியேற வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். நீரில் மூழ்கிய இளம்பயிருக்கு, வரப்புகளில் தத்துமடை அமைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.