/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி நகருக்குள் 3.2 கி.மீ., துார புறவழிச்சாலை பணி...இழுபறி:வேகவதி குறுக்கே பாலம் கட்டுவது முடியாததால் சிக்கல்
/
காஞ்சி நகருக்குள் 3.2 கி.மீ., துார புறவழிச்சாலை பணி...இழுபறி:வேகவதி குறுக்கே பாலம் கட்டுவது முடியாததால் சிக்கல்
காஞ்சி நகருக்குள் 3.2 கி.மீ., துார புறவழிச்சாலை பணி...இழுபறி:வேகவதி குறுக்கே பாலம் கட்டுவது முடியாததால் சிக்கல்
காஞ்சி நகருக்குள் 3.2 கி.மீ., துார புறவழிச்சாலை பணி...இழுபறி:வேகவதி குறுக்கே பாலம் கட்டுவது முடியாததால் சிக்கல்
ADDED : ஜூன் 25, 2025 02:06 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், செவிலிமேடு முதல் சர்வதீர்த்தகுளம் வரையிலான சந்திப்பு வரை புதியதாக அமைக்கப்பட உள்ள 3.2 கி.மீ.,துாரம் புறவழிச்சாலைக்கான முக்கிய பணியாக வேகவதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி இழுத்தடிக்கப்படுகிறது. இதனால், புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 2.76 லட்சம் பேர் வசிக்கின்றனர். அடுத்த 10 ஆண்டுகளில், இந்த மக்கள் தொகை 4.5 லட்சமாக உயரக்கூடும். அதேபோல், வாகனங்களின் பெருக்கமும் அதிகரிக்கும்.
தற்போது, நகரில் ஏராளமான வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் தினசரி திணறி வருகின்றனர்.
மேலும், காஞ்சிபுரம் கோவில்கள் நிறைந்த நகரமாகவும், பட்டுச்சேலைக்கு பிரசித்தி பெற்ற நகரமாகவும் விளங்குவதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கானோர் வந்து வந்து செல்கின்றனர்.
அதனால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, காந்தி சாலையில் பேருந்துகள் செல்வதற்கு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.
வெளியூர்களில் இருந்து பட்டுச்சேலை வாங்க வருவோர், தங்களின் வாகனங்களை காந்தி சாலையில் நிறுத்த இட வசதி இல்லாமல், சாலையிலேயே நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
மேலும், நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, காலை, மாலை நேரங்களில், கனரக வாகனங்கள் நகர் பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் நெரிசலை கட்டுப்படுத்த, செவிலிமேடு - மிலிட்டரி சாலை சந்திப்பு பகுதியில் இருந்து, பாக்கியலட்சுமி நகர், மூவேந்தர் நகர், ஜெம் நகர், அருணாசலம் நகர், சலவைத் தொழிலாளர்கள் நகர், விசாலாட்சி நகர் பகுதி வழியாக, பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவை இணைத்து, அங்கிருந்து சர்வதீர்த்தகுளம் வரையிலான 3.2 கி.மீ., துாரம் வரை புதிதாக புறவழிச்சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த புறவழிச்சாலையின் மையப்பகுதியாக வேகவதி ஆறு உள்ளது. இங்கு ஒரு உயர்மட்ட பாலம் கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், 2023ல், 5 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணிகள் துவங்கின.
இரண்டு ஆண்டுகளான நிலையில், இதுவரை பாலம் கட்டுமான பணிகள் இழுபறியாகவே நடப்பதால், புறவழிச்சாலையை அமைக்க முடியாத நிலையும் நீடிக்கிறது.
இந்த புறவழிச்சாலை அமைந்தால், ஒலிமுகமதுபேட்டை வழியாக வேலுார், சென்னை, அரக்கோணம் மார்க்கமாக திருப்பதி போன்ற ஊர்களுக்கு வந்தவாசி, உத்திரமேரூரில் இருந்து வருவோர் எளிதாக செல்ல வசதி ஏற்படும். காஞ்சிபுரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
வேகவதி ஆற்றின் குறுக்கே அமையும் பாலம், 66 மீட்டர் நீளம், 9 மீட்டர் அகலத்தில் கட்டப்படுகிறது. விசாலாட்சி நகர் கிருஷ்ணன் தெருவை இணைக்கும் பாலமாக உள்ளது.
பாலத்திற்கான பணிகள், 25 சதவீதமே நிறைவடைந்த நிலையில், பாலத்திற்கான துாண்கள் கூட இன்னமும் கட்டப்படவில்லை. இவ்வாறான சூழலில், புறவழிச்சாலைக்கான பணிகள் கிடப்பில் உள்ளன.
ரூ.9 கோடி நிதி தேவை
செவிலிமேடு பகுதியில் இருந்து, 3.2 கி.மீ., புறவழிச்சாலை மற்றும் வேகவதி ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டுவதற்கு, 'டெண்டர்' விடப்பட்டு, 5 கோடி ரூபாய் நிதியில் பணிகள் நடந்து வருகின்றன. பாலம் கட்டுவதற்கு இப்போது கூடுதல் நிதி தேவைப்படுகிறது.
வேகவதி குறுக்கே, பாலம் கட்ட மொத்தம் 14 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதில், 5 கோடி ரூபாய் தான் நிதி கிடைத்துள்ளது. அதற்கான பணிகள் தான் இப்போது நடந்துள்ளது. மீதமுள்ள 9 கோடி ரூபாய்க்கு நிதி கேட்டுள்ளோம். நிதி வந்தவுடன் பணிகள் துவங்கும்.
- மகாலட்சுமி
மேயர், காஞ்சிபுரம் மாநகராட்சி