/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு வீடு கட்டும் திட்டத்தில் 3,453 பேருக்கு அனுமதி! 14,200 விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டதா?
/
அரசு வீடு கட்டும் திட்டத்தில் 3,453 பேருக்கு அனுமதி! 14,200 விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டதா?
அரசு வீடு கட்டும் திட்டத்தில் 3,453 பேருக்கு அனுமதி! 14,200 விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டதா?
அரசு வீடு கட்டும் திட்டத்தில் 3,453 பேருக்கு அனுமதி! 14,200 விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டதா?
ADDED : ஆக 18, 2024 11:59 PM
காஞ்சிபுரம் : கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் பெறப்பட்ட 17,653 விண்ணப்பங்களில் 3,453 பேருக்கு மட்டுமே வீடு கட்டும் ஆணை வழங்கப்பட்டு உள்ளது. எஞ்சிய விண்ணப்பதாரர்கள் வசிக்கும் குடிசைகளில், அடிப்படை தேவைக்காக சிமென்ட் ஷீட் அல்லது தகர கொட்டகை அமைத்தால், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கும் அபாயம் இருப்பதால், தங்களுக்கு வீடு கிடைக்குமா என சந்தேகத்தில் உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஒன்றியங்கள் உள்ளன. 274 ஊராட்சிகளில், 1,354 குக்கிராமங்கள் உள்ளன.
கணக்கெடுப்பு
இந்த கிராமங்களில் குடிசை வீடுகளில் பலர் வசிக்கின்றனர். மழைக்காலத்தில் மிகவும் அவதிப்படும் நிலையில், அவர்கள் பயனடைவதற்காக, தமிழக அரசு சார்பில், 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், இலவசமாக வீடு கட்டி தரப்படுகிறது.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தில் வீடு தேவைப்படுவோர் விபரம் குறித்து, ஊரக வளர்ச்சி துறையினர் கணக்கெடுப்பு நடத்தினர். அதேபோல, 2022ல் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கு, குடிசை வீடுகளை கணக்கெடுப்பு நடத்தி முடித்து உள்ளனர்.
இந்த கணக்கெடுப்பு வாயிலாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், 17,653 வீடுகள் தேவைப்படும் என, புள்ளி விபரம் தெரிய வந்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 3,453 பயனாளிகளுக்கு, வீடு கட்டும் ஆணைக்கு, ஊரக வளர்ச்சி துறை நிர்வாக அனுமதி அளித்துள்ளது. எஞ்சி இருக்கும், 14,200 பேரின் விண்ணப்பம், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளது.
சந்தேகம்
பலரது விண்ணப்பம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளதால், தங்களுக்கு வீடு கிடைக்குமா என, அவர்கள் சந்தேகத்தில் உள்ளனர்.
இது குறித்து வீடு கட்டும் திட்டத்திற்கு விண்ணப்பித்தோர் கூறியதாவது:
மத்திய அரசின் சில திட்டங்களில் முதலில் வீடு கட்டி கொடுத்தனர். தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், பசுமை வீடு வழங்கும் திட்டம் முடக்கப்பட்டு, கலைஞர் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மொத்த விண்ணப்பத்தில் 30 சதவீத பயனாளிகளுக்கு மட்டுமே, வீடு கட்டுவதற்கான பணி ஆணை, இந்தாண்டு வழங்கப்பட்டு உள்ளது. எஞ்சிய 14,200க்கும் மேற்பட்டோர் குறித்த தகவல் எதுவும் வரவில்லை.
தவிர, எஞ்சியுள்ள விண்ணப்பதாரர்களது குடிசை வீடுகளில், மழை பாதிப்பு, விலங்குகள் தொல்லை போன்றவற்றை தடுப்பதற்காக சிமென்ட் ஷீட் அல்லது தகர கொட்டகை அமைத்திருந்தால், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளது.
முன்னுரிமை
எனவே, கணக்கெடுப்பு நடத்தி முடித்த அனைவருக்கும், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில், வீடு கட்டும் ஆணை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில், 3,453 பேருக்கு வீடு கட்டும் ஆணை வழங்கப்பட்டு உள்ளது. இதில், கூரை வீட்டில் வசிக்கும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு வீட்டிற்கு, 3.50 லட்சம் ரூபாய் செலவில், 360 சதுர அடியில் வீடு கட்டிக் கொள்ளலாம். நடப்பாண்டு வீடு கட்டுவதற்கு ஒதுக்கீடு பெற முடியாதவர்கள், அடுத்த நிதி ஆண்டில் பயன் பெறலாம். அப்போது, குடிசை வீடு பயனாளிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.