/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குன்றத்துார் ஆர்.டி.ஓ., மைதானத்திற்கு சிக்கராயபுரத்தில் 4 ஏக்கர் இடம் தேர்வு
/
குன்றத்துார் ஆர்.டி.ஓ., மைதானத்திற்கு சிக்கராயபுரத்தில் 4 ஏக்கர் இடம் தேர்வு
குன்றத்துார் ஆர்.டி.ஓ., மைதானத்திற்கு சிக்கராயபுரத்தில் 4 ஏக்கர் இடம் தேர்வு
குன்றத்துார் ஆர்.டி.ஓ., மைதானத்திற்கு சிக்கராயபுரத்தில் 4 ஏக்கர் இடம் தேர்வு
ADDED : செப் 08, 2025 12:41 AM

குன்றத்துார்:குன்றத்துார் ஆர்.டி.ஓ., வாகன சோதனை மைதானம் அமைக்க, சிக்கராயபுரத்தில் 4 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
குன்றத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகம், குன்றத்துார் அருகே கோவூரில் வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. இங்கு, வாகன சோதனை மைதானம் இல்லாததால், திறந்தவெளி இடங்களில், இருசக்கர வாகன ஓட்டிகள் '8' போடும் சோதனை, புதிய வாகனங்கள் மற்றும் பெயர் மாற்றம் செய்யப்படும் வாகனங்கள் தகுதி சான்றுக்கான ஆய்வு போன்றவை நடக்கின்றன.
மேலும், பறிமுதல் செய்யும் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் அதிகாரிகள் திணறி வந்தனர். இதையடுத்து, குன்றத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில், குன்றத்துார் அருகே சிக்கராயபுரத்தில் 20க்கும் மேற்பட்ட கைவிடப்பட்ட கல்குவாரி குட்டைகள் உள்ளன. இதில், குன்றத்துார்- - பூந்தமல்லி சாலையோரம் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இருந்த சுமார் 200 அடி ஆழம் கொண்ட இரண்டு கல்குவாரி குட்டைகளில், முதற்கட்ட மெட்ரோ ரயில் வழித்தடப் பணியின்போது தோண்டப்பட்ட மண் கொட்டி மூடப்பட்டது.
மூடப்பட்ட கல்குவாரி குட்டைகள், சுமார் 4 ஏக்கர் நிலம் பயன்பாடின்றி உள்ளது. இந்நிலையில், இந்த நிலத்தில் குன்றத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கான, வாகன சோதனை மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த இடத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் இந்த இடத்தில், வாகன சோதனை மைதானம் செயல்பட உள்ளதாக, குன்றத்துார் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.