ADDED : நவ 11, 2025 10:06 PM

உத்திரமேரூர்: சாலவாக்கத்தில், குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, பழவேரி, அரும்புலியூர், காவணிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பழவேரி கிராமத்தில் பத்மநாபன், 40; என்பவரின் பெட்டிக்கடையில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதில், 10 பாக்கெட் குட்கா பொருட்கள் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
பின், குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளரான பத்மநாபனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் குட்கா பொருட்களை திருக்கச்சூரில் உள்ள சம்சுதீன், 40; என்பவரின் மளிகை கடையில் வாங்கியதாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, சாலவாக்கம் போலீசார் திருக்கச்சூரில் உள்ள சம்சுதீன் மளிகை கடையில் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், அரசால் தடை செய்யப்பட்ட 289 கிலோ குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. உடனே, குட்கா பொருட்கள் மற்றும் அதை வினியோகம் செய்ய பயன் படுத்தப்பட்ட ஒரு டாடா ஏஸ் வேன், இரண்டு பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதை தொடர்ந்து, பத்மநாபன், சம்சுதீன் மற்றும் அவரிடம் வேலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த சாதிக் பாஷா, 30, சையது அப்தாஹிர், 34, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

