ADDED : அக் 13, 2024 12:40 AM
ஸ்ரீபெரும்புதுார்,:படப்பை அடுத்த, ஒரகடம் மேம்பாலம் கீழ் உள்ள கடைகளில் போலீசார் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடையில் உரிமையாளர் ராஜலிங்கம், 45, என்பரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், சிங்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள மளிகை கடையில் இருந்து வாங்கி வந்தது தெரிந்தது. இதையடுத்து, சிங்பெருமாள் கோவிலில் உள்ள பிஸ்மில்லா மளிகை கடை மற்றும் கடையின் உரிமையாளர் தாஜூதீன், 62, என்பரின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், கட்டில் அடியில் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்த 40,000 ரூபாய் மதிப்புள்ள 15 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, தாஜூதீன், 62, அவரின் மகன் அசார், 30 மற்றும் ராஜலிங்கம், 45 ஆகிய மூன்று பேரை ஒரகடம் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல, ஸ்ரீபெரும்புதுார் அருகே, சிவந்தாங்கல் கிராமத்தில் உள்ள மளிகை கடையில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது, கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 30,000 ரூபாய் மதிப்புள்ள, 10 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் ராமராஜன், 33, என்பரை போலீசார் கைது செய்தனர்.