/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 41 தாசில்தார் பணியிடங்கள் காலி பதவி உயர்வு குழப்பத்தில் துணை தாசில்தார்கள் புலம்பல்
/
காஞ்சியில் 41 தாசில்தார் பணியிடங்கள் காலி பதவி உயர்வு குழப்பத்தில் துணை தாசில்தார்கள் புலம்பல்
காஞ்சியில் 41 தாசில்தார் பணியிடங்கள் காலி பதவி உயர்வு குழப்பத்தில் துணை தாசில்தார்கள் புலம்பல்
காஞ்சியில் 41 தாசில்தார் பணியிடங்கள் காலி பதவி உயர்வு குழப்பத்தில் துணை தாசில்தார்கள் புலம்பல்
ADDED : நவ 05, 2024 07:04 AM
காஞ்சிபுரம் : வருவாய் துறையில், நேரடி நியமனம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு, 2012 டிசம்பரில், 216 பேர் உதவியாளர்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இவர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் துணை தாசில்தாராகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தாசில்தாராக பதவி உயர்வு பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், 12 ஆண்டுகளாக முறையான பதவி உயர்வும் இல்லாமல், தேர்வு நிலை உதவியாளர்களாகவும், துணை தாசில்தார்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
நீதிமன்றம் அறிவுறுத்தல்
பதவி உயர்வு தொடர்பான அரசாணை விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில் ஏற்பட்ட பல குழப்பங்கள் காரணமாக, தற்போது வரை பதவி உயர்வு கிடைக்கவில்லை.
பதவி உயர்வு தொடர்பான வழக்கு, 2018ல் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அப்போது, முறையான விதிகளை பின்பற்றி பதவி உயர்வு வழங்க, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
வருவாய் துறை செயலர், வருவாய் நிர்வாக கமிஷனர் ஆகியோரிடம் முறையான அனுமதி பெறாமலும், குறுவட்ட வருவாய் ஆய்வாளராக இரண்டு ஆண்டுகளாக பயிற்சி முடிக்காதவர்களையும், பராமரிப்பு தேர்வு முடிக்காதவர்களையும், துணை தாசில்தார்களாக 2022ல் பதவி உயர்வு அளித்தனர்.
மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்காமல், இன சுழற்சி முறையில் பதவி உயர்வு கொடுக்கப்பட்டதால், பதவி உயர்வு பிரச்னை மேலும் தீவிரமானது. பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கிடையே, பரந்துார் விமான நிலைய திட்டத்துக்கான கருத்துரு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து சென்றது.
அப்போது, தாசில்தார் பற்றாக்குறை, பதவி உயர்வு பிரச்னை, நீதிமன்ற வழக்குகளை முடிவுக்கு கொண்டு வராமல் இழுத்தடித்தது போன்ற காரணங்களால், தாசில்தார் பதவிகள் நிரப்பப்படாமலேயே இருந்தது.
அதிருப்தி
இந்த நிலையில், விமான நிலைய திட்டம் துவங்கப்பட்டு, நில எடுப்பு பணிகள் துவங்கியது. ஆனால், தாசில்தார் பணியிடங்கள் போதிய அளவில் இல்லாததால், வெளி மாவட்டங்களில் இருந்து தாசில்தார்கள் நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
போதிய தகுதி இருந்தும், நிர்வாக அலட்சியம் காரணமாக, தாசில்தாராக பதவி உயர்வு கிடைக்காமல், 41 தாசில்தார் பணியிடங்கள் தற்போது வரை காலியாகவே உள்ளன.
தாசில்தார் பதவியிடங்கள் காலியாக இருப்பதால், சென்னை மாவட்ட பட்டியலில் உள்ள தாசில்தார்கள், பயிற்சிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரெகுலர் தாசில்தாராக நியமிக்கப்படுவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதவி உயர்வு கிடைக்காமல் இருக்கும் துணை தாசில்தார்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
எதிர்பார்ப்பு
தமிழகத்தில் உள்ள அனைத்து நில எடுப்பு தாசில்தார்களையும் திட்டம் வாரியாக ஒருங்கிணைத்து, பதவிகள் குறைக்கப்பட்டு வருகின்றன.
இதனால், தாசில்தார் பதவியில் இருந்து துணை தாசில்தாராக பதவி இறக்கம் செய்வதை தவிர்த்து, காஞ்சிபுரம் போல், காலியிடங்கள் அதிகம் உள்ள மாவட்டங்களை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, தாசில்தார் பதவி உயர்வு பட்டியலை துணை தாசில்தார்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தாசில்தார் பதவியிடங்கள் மட்டுமல்லாமல், வருவாய் துறையின் வருவாய் ஆய்வாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் என, பல்வேறு முக்கிய பதவியிடங்கள் காலியாகவே உள்ளன.
மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளில், வருவாய் துறை செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது.
ஆனால், ஏராளமான பணியிடங்கள் காலியாக இருப்பதை விரைவாக நிரப்ப வேண்டும் என, வருவாய் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.