/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆறு, ஏரிகளில் மூழ்கி 3 நாட்களில் 5 பேர் பலி
/
ஆறு, ஏரிகளில் மூழ்கி 3 நாட்களில் 5 பேர் பலி
ADDED : நவ 03, 2025 11:05 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், வெவ்வேறு இடங்களில் ஆறு, ஏரிகளில் மூழ்கி, கடந்த 3 நாட்களில், 5 பேர் இறந்திருப்பது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய இரு ஆறுகளில், கடந்த 15 நாட்களுக்கு முன்பாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போதும் ஆறுகளில் தண்ணீர் செல்கிறது.
அதேபோல், உத்திரமேரூர், தாமல் போன்ற பெரிய ஏரிகளும் நிரம்பி வழிகிறது. இதுபோன்ற நீர்நிலைகளில், யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும், நீர்வள ஆதாரத்துறையும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. தாமல் ஏரியில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பலர் நீர்நிலைகளில் குளிப்பதை தொடர்கின்றனர்.
இதன் எதிரொலியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த மூன்று நாட்களில், ஏரி, ஆறுகளில் மூழ்கி, 5 பேர் பலியாகி இருப்பது அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நத்தப்பேட்டை ஏரியில், கடந்த 1ம் தேதி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சங்கரநாராயணன் என்பவர் மூழ்கி இறந்தார். அதைத்தொடர்ந்து, தாமல் ஏரியில் மூழ்கிய பாலா, 19, மற்றும் மணவாளன்,37, ஆகிய இருவரின் உடல்களையும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் கடந்த இரு நாட்களாக தேடி மீட்டனர். அதேபோல், காஞ்சிபுரம் ஓரிக்கை பாலாற்றில் மூழ்கிய சிவசங்கரன், 17, சிறுவனின் உடலையும் போலீசார் மீட்டனர்.
இதைத்தொடர்ந்து, வாலாஜாபாத் அருகே உள்ள இளையனார் வேலுார் கிராமத்தில் பாயும் செய்யாற்றில் மூழ்கிய உமாமகேஸ்வரன், 37, என்ற நபரும் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இவரின் சடலத்தையும் போலீசார் நேற்று மீட்டனர்.
நான்கு வெவ்வேறு இடங்களில் ஐந்து பேர் இறந்துள்ளனர்.

