/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
5 கோவில் சிலைகள் மாயமான வழக்கில்... திணறல்! உரிய பிரிவிடம் ஒப்படைப்பதிலும் இழுபறி
/
5 கோவில் சிலைகள் மாயமான வழக்கில்... திணறல்! உரிய பிரிவிடம் ஒப்படைப்பதிலும் இழுபறி
5 கோவில் சிலைகள் மாயமான வழக்கில்... திணறல்! உரிய பிரிவிடம் ஒப்படைப்பதிலும் இழுபறி
5 கோவில் சிலைகள் மாயமான வழக்கில்... திணறல்! உரிய பிரிவிடம் ஒப்படைப்பதிலும் இழுபறி
ADDED : மே 28, 2024 03:59 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து திருடப்பட்ட இரண்டு சோமாஸ்கந்தர் சிலைகள், தலா ஒரு விநாயகர் சிலை, பெருமாள் சிலை, தாயார் சிலை என, ஐந்து சிலைகள் திருடப்பட்டு பல ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில இடங்களில் வழக்குகள், காவல் நிலையத்தில் இருந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கும் நிலையிலேயே இழுபறியில் உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் திருடப்பட்ட கோவில் சிலைகள், பல்வேறு நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் இருப்பது சமீபகாலமாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
வெளிநாட்டில் உள்ள சிலைகளை மீட்பதில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மெத்தனமாக செயல்படுவதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் தலைவர் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் ஏற்கனவே குற்றம்சாட்டி வருகிறார்.
அதற்கேற்றாற்போல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருடப்பட்ட சிலைகள் பற்றிய தகவல்கள் இதுவரை எதுவும் வெளியாகாமல் உள்ளன. காலம், காலமாக பக்தர்களால் வழிபட்டு வந்த சிலைகளை மீண்டும் கோவிலில் வைத்து எப்போது வழிபட முடியும் என, பக்தர்கள் ஏங்குகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாகரல் கிராமத்திலிருந்து காவாந்தண்டலம் செல்லும் வழியில் உள்ள கவுசலாம்பிகை சமேத திருமலை கோவில். 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்தது. இந்த கோவிலை, மாகரல் கிராமத்தில் உள்ள திருமலை அய்யங்கார் குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர்.
கடந்த 2015ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 30ம் தேதி இரவு, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, கோவிலின் கருவறையில் இருந்த, ஐம்பொன்னில் செய்யப்பட்ட, 2 அடி உயரமுள்ள பெருமாள் மற்றும் தாயார் உற்சவ சிலைகள் திருடப்பட்டன. இன்று வரை இந்த இரு சிலைகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
அதேபோல, காஞ்சிபுரம், காமாட்சியம்மன் கோவில், சன்னிதி தெருவில் உள்ளது, ஏலேல சிங்க விநாயகர் கோவில். இந்த கோவிலில், 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி, ஐம்பொன்னால் செய்த உற்சவ விநாயகர் சிலை திருடப்பட்டது. பழமையான இந்த விநாயகர் சிலையும் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
குறிப்பாக, இந்த இரு சிலைகள் திருடப்பட்ட வழக்குகள், அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்குகூட இன்னும் வழக்கு மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள சிவன்கூடல் கிராமத்தில் உள்ள சிதிலமடைந்த சிவன் கோவிலில் இருந்து, பல ஆண்டுகளுக்கு முன்பாக சோமாஸ்கந்தர் சிலை திருடப்பட்டது. அச்சிலை திருடப்பட்டது கூட யாருக்கும் தெரியாமல் இருந்தது.
அதன்பின், 2002ல், சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரிடம் இருந்து, சிங்கப்பூர் 'ஏசியன் சிவிலைசேஷன் மியூசியம்' வாங்கியது.
அங்கு வைக்கப்பட்டுள்ள இந்த சோமாஸ்கந்தர் சிலை இன்று வரை ஊர் திரும்பவில்லை. இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, கிருஷ்ணதேவராயர் கால ஆட்சியின்போது, சோமாஸ்கந்தர் சிலை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சிலையும், சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர், ஏசியன் சிவிலைசேஷன் மியூசியத்தில் காட்சிப்பொருளாக உள்ளது. இச்சிலை, 20 ஆண்டுகளுக்கு முன்பாக திருடப்பட்டிருக்கலாம் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏகாம்பரநாதர் கோவிலில், இச்சிலை இருந்ததற்கு எந்த ஆதாரமும் கோவிலில் இல்லை என பக்தர்களின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு கோவில் நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
ஏற்கனவே, இக்கோவிலில், விநாயகர், அம்மன் என, 16 சிலைகள் ஆவணம் இன்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சோமாஸ்கந்தர் சிலை, காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது என்றும், ஏகாம்பரநாதர் கோவிலுக்காக இச்சிலை உருவாக்கப்பட்டது என்றும், 'ஏசியன் ஆர்ட் மியூசியத்தின்' இணையதளத்திலேயே தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
சிலைகள் எங்குள்ளது என்ற விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பல்வேறு ஊர்களில் உள்ள தொன்மையான சுவாமி சிலைகளை மீட்பதும், அவை இருக்கும் இடங்களை கண்டுபிடிக்கும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து திருடப்பட்ட சிலைகளை விரைவில் மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முரளியிடம் கேட்டபோது, ''சிலை கடத்தல் தடுப்பு பிரிவுதான் விசாரிக்க வேண்டும் என்பது இல்லை; சிலையின் பழமை, மதிப்பு போன்றவை கணக்கிட்டு, அவற்றை உள்ளூர் காவல் நிலையத்திலேயே கூட விசாரிக்க சொல்லியிருக்கலாம். சில வழக்குகள் அதுபோல நடப்பதுண்டு. இரு சிலை வழக்குகள் பற்றியும் நான் விசாரிக்கிறேன்,'' என்றார்.