
உத்திரமேரூர், வவிதைகள் சுற்றுசூழல் தன்னார்வ அமைப்பு சார்பில், மூன்று ஆண்டுகளில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில், 3 லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து, நான்காவது ஆண்டில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதன் துவக்க விழா, கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி, உத்திரமேரூர் ஒன்றியம், வயலக்காவூர் கிராமத்தில் துவங்கப்பட்டது. அப்போது, அப்பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் 5,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பனை விதைகள் நடவு நிகழ்ச்சி நடந்து வந்தது.
நேற்று, உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் செய்யாற்றங்கரையோரம் 5,000 பனை விதைகள் நடவு செய்து, நான்காம் ஆண்டுக்கான நிறைவு விழா நடைபெற்றது.
விதைகள் தன்னார்வ அமைப்பு தலைவர் பசுமை சரண் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், அப்பகுதி ஊராட்சி தலைவர் மஞ்சுளா மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சி கவுன்சிலரும், மரம் வளர்ப்பு ஆர்வலருமான வெங்கடேசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இதில், ஆதி பொறியியல் கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் திரிவேணி அகடாமி பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்று, பனை விதைகளை நடவு செய்தனர்.