ADDED : செப் 23, 2024 05:51 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அனைத்து ரோட்டரி சங்கங்கள், பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு, சர்வம், மகிழம், வடலி, காஞ்சி அன்னசத்திரம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பு சார்பில், கீழ்கதிர்பூரில் இருந்து குண்டுகுளம் வழியாக செவிலிமேடு ஏரிக்கரையோரம் 5,000 பனை விதைகள் நடவு செய்யும் துவக்க விழா நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் விழாவை துவக்கி வைத்தார். இதில், முதல் நாளான நேற்று, 1,500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
மீதமுள்ள விதைகள் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் நடப்படும் என, பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பின் நிறுவனர் பசுமை மேகநாதன் தெரிவித்தார்.
தேனம்பாக்கம் ஏரிக்கரை: காஞ்சிபுரம் ஜெயமாருதி சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் ராஜாஜி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், தேனம்பாக்கம் ஏரிக்கரையில், 5,000 பனை விதைகள் நடும் விழா நேற்று நடந்தது.
மாநகராட்சி கவுன்சிலர் சங்கர் தலைமை வகித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் சாம் ராஜதுரை பனை விதை நடும் விழாவை துவக்கி வைத்தார்.
இதில், ராஜாஜி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மோகன், செயலர் முரளி, பொருளாளர் சரவணன், ஜெயமாருதி சிலம்பம் பயிற்சி பள்ளி நிறுவனர் ஆசிரியர் காமகோட்டி, சிலம்ப பயிற்சி பள்ளி மாணவ- - மாணவியர் உள்ளிட்டோர் பனை விதை நடவு செய்தனர்.