/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் ஏரியில் 65 சதவீத நீர் இருப்பு
/
உத்திரமேரூர் ஏரியில் 65 சதவீத நீர் இருப்பு
ADDED : நவ 05, 2024 06:53 AM

உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று உத்திரமேரூர் ஏரி. 20 அடி ஆழம் கொண்ட இந்த ஏரியில், மூன்று கலங்கல்களும், 18 மதகுகளும் உள்ளன. இந்த ஏரி மழைக்காலத்தில் முழுமையாக நிரம்பினால், இந்த நீரை கொண்டு ஏரிக்கான 18 மதகுகள் வழியாக வேடபாளையம், மேனலூர், அரசாணிமங்கலம், காட்டுப்பாக்கம், காக்கநல்லூர், புலியூர், நல்லூர் உள்ளிட்ட 18 கிராமங்களில் உள்ள 5,636 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் வசதி பெறும்.
மேலும், மழைக்காலத்தில் இந்த ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீர், நெல்வாய் மடுவு வழியாக மதுராந்தகம் ஏரிக்கும், காவனூர்புதுச்சேரி, கம்மாளம்பூண்டி அரசாணிமங்கலம் மற்றும் அத்தியூர் ஆகிய கிராம ஏரிகளுக்கு செல்கிறது.
உத்திரமேரூரில் இருந்து, 8 கி.மீ., தூரத்தில் உள்ள அனுமந்தண்டலம் - செய்யாற்று அணைக்கட்டு, உத்திரமேரூர் ஏரிக்கான முக்கிய நீர்வரத்து ஆதாரமாக உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் சில நாட்களாக பெய்த மழை காரணமாக, தற்போது செய்யாற்றில் நீர்வரத்து துவங்கி உள்ளது. இதனால், அனுமந்தண்டலம் - செய்யாற்று அணைக்கட்டு மூலம் உத்திரமேரூர் ஏரிக்கான நீர்வரத்தும் துவங்கி உள்ளது.
இதுகுறித்து, உத்திரமேரூர் ஒன்றிய நீர்வளத்துறை உதவி பொறியாளர் கண்ணன் கூறியதாவது:
கடந்த ஆண்டுகளில் உத்திரமேரூர் ஏரிக்கான மதகுகள் சீரமைக்கப்பட்டு, கரைகள் பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், முழு கொள்ளளவுக்கான நீரை தேக்கி வைக்க ஏரி தயார் நிலையில் உள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதற்கு முன்னதாகவே, தற்போது வரை பெய்துள்ள மழைக்கு ஏரியில் 65 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்தால், விரைவில், உத்திரமேரூர் ஏரி நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.