ADDED : ஜூலை 29, 2025 12:18 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம் உள்ள ரேஷன் கடையில் ஏழு அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது.
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, வேகவதி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சிங்கபெருமாள் கோவில் தெரு ரேஷன் கடையில், 1,017 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அட்டையின் வகைப்பாட்டிற்கு ஏற்ப அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று, மதியம் 2:30 மணிக்கு ரேஷன் கடையில், ஊழியர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். இதில், அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் ஊழியர் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட மூட்டைகளை அடுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, மூட்டைகளுக்கு இடையே நீளமான பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை கண்ட, கடை ஊழியர்கள் இருவரும் அலறியடித்தனர்.
தொடர்ந்து இருவரும் பாம்பை விரட்ட முயன்றனர். ஆனால், பாம்பு தலையை துாக்கியபடி பயமுறுத்தியதோடு, மூட்டைகளுக்கு இடையே சென்று பதுங்கி கொண்டது.
இதுகுறித்து ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படை குழுவினர் ரேஷன் கடைக்கு சென்றனர். மூட்டைகளுக்கு இடையே பதுங்கி இருந்த ஏழு அடி நீளமுள்ள சாரை பாம்பை, பிடித்து வனப்பகுதிக்குள் சென்று விட்டனர்.
பாம்பு புகுந்த சிங்கபெருமாள் கோவில் தெரு ரேஷன் கடையின் தரைப்பகுதி சேதமடைந்து இருந்ததால், எலிகள் ஆங்காங்கே வளைகள் தோண்டி இருந்தது. சேதமடைந்த தரைப்பகுதி வழியாக எலிகளை பிடிப்பதற்காக, பாம்பு ரேஷன் கடைக்குள் புகுந்துள்ளது.எனவே, ரேஷன் கடையில் சேதமடைந்த தரைப்பகுதியை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.