/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழிற்சாலை பஸ் மோதி 8 பசு மாடுகள் உயிரிழப்பு
/
தொழிற்சாலை பஸ் மோதி 8 பசு மாடுகள் உயிரிழப்பு
ADDED : நவ 08, 2025 02:56 AM

ஸ்ரீபெரும்புதுார்: சுங்குவார்சத்திரம் அருகே, நேற்று அதிகாலை அதிவேகமாக சென்ற தனியார் தொழிற்சாலை பேருந்து மோதியதில், எட்டு பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே, சிறுமாங்காடு, சலையனுார் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமானோர் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள், கொட்டகை அமைத்து, மாடுகளை கட்டி பராமரிப்பது இல்லை.
மேய்ச்சல்களுக்கு செல்லும் மாடுகள், இரவு நேரங்களில் கிராம சாலை மற்றும் சிப்காட் சாலையில் படுத்து ஓய்வெடுப்பது வழக்கம். நேற்று அதிகாலை வல்லம் வடகால் செல்லும் சிப்காட் சாலையில், வழக்கம்போல் மாடுகள் ஓய்வெடுத்தன.
இந்நிலையில், சுங்குவார்சத்திரத்தில் உள்ள, 'பாக்ஸ்கான்' என்ற மொபைல் போன் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையின் பேருந்து அவ்வழியே சென்றது.
அதிவேகமாக சென்ற பேருந்து, சாலையில் படுத்திருந்த மாடுகள் மீது அடுத்தடுத்து மோதி சென்றது. இதில், சம்பவ இடத்திலேயே எட்டு மாடுகள் உயிரிழந்தன. மேலும் சில மாடுகள் காயம் அடைந்தன.
இதையடுத்து, மாட்டின் உரிமையாளர்கள், தனியார் தொழிற்சாலை முன் கூடினர். அங்குள்ள காவலாளிகளிடம் வாக்குவாதம் செய்தனர். சுங்குவார்சத்திரம் போலீசார், மாட்டின் உரிமையாளர்களிடம் சமாதான பேச்சு நடத்தி அவர்களை கலைத்தனர்.
அதன்பின், சாலையில் கிடந்த மாடுகளை அப்புறப்படுத்திய போலீசார், விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

