/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
86 கட்டடங்களுக்கு பதிலாக புதிதாக கட்டுவதற்கு... பரிந்துரை! கைகொடுக்கும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்
/
86 கட்டடங்களுக்கு பதிலாக புதிதாக கட்டுவதற்கு... பரிந்துரை! கைகொடுக்கும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்
86 கட்டடங்களுக்கு பதிலாக புதிதாக கட்டுவதற்கு... பரிந்துரை! கைகொடுக்கும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்
86 கட்டடங்களுக்கு பதிலாக புதிதாக கட்டுவதற்கு... பரிந்துரை! கைகொடுக்கும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்
ADDED : ஜன 09, 2024 12:32 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், 86 சேதமடைந்த ஊராட்சி கட்டடங்களுக்கு பதிலாக, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, ஊரக வளர்ச்சி துறை அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது. தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் வாயிலாக, புதிய கட்டடங்கள் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இது போன்ற ஊராட்சிகளில், ஊராட்சி அலுவலக கட்டடம், இ - சேவை மைய கட்டடம், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டடங்கள் உள்ளன.
இதில், ஊராட்சி அலுவலக கட்டடங்கள், 30 ஆண்டுகளுக்கு மேலாகி இருப்பதால், கட்டடத்தின் கூரை, கட்டடம் விரிசல் மற்றும் கழிப்பறை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.
சேத கட்டடங்களுக்கு, பதிலாக புதிய கட்டடங்களை கட்டிக் கொடுக்க வேண்டும் என, உள்ளாட்சி நிர்வாகிகள் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., ஆகியோருக்கு கோரிக்கை மனு மற்றும் பிற திட்டங்களில் இருந்து, இக்கட்டடங்களை கட்டிக் கொடுக்க வேண்டும் என, கலெக்டரிடம் மனு அளிக்கின்றனர்.
தவிர, மத்திய அரசின் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் புதிய கட்டடம் கட்டிக் கொடுக்கலாம் என, ஊரக வளர்ச்சி துறையினர் ஆண்டுதோறும் அரசிற்கு பரிந்துரை செய்து வருகிறது.
நடப்பாண்டு கணக்கெடுப்பின்படி, 16 ஊராட்சி கட்டடங்கள் முழுதுமாக சேதம் என, 86 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
இந்த சேதமடைந்த கட்டடங்களுக்கு பதிலாக, புதிய கட்டடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என, மாநில ஊரக வளர்ச்சி துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, சேதமடைந்த கட்டடங்களுக்கு பதிலாக புதிய கட்டடங்கள் கிடைத்தால், பல்வேறு ஊராட்சி அலுவல கட்டடங்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என, ஊராட்சி தலைவர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊராட்சியில் சேதமடைந்த கட்டடங்களை கணக்கெடுத்துள்ளோம். அதன்படி, 86 சேதமடைந்த கட்டடங்களுக்கு பதிலாக, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், புதிய கட்டடங்களை கட்டுவதற்கு பரிந்துரை செய்துள்ளோம்.
நிதி ஒதுக்கீடு மற்றும் கட்டடம் கட்டுவதற்கு ஒப்புதல் கிடைத்த பின், பணிகள் துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.