/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் ரூ.68 கோடியில் புதிய சுத்திகரிப்பு நிலையம்...அமைகிறது: தினம் 360 லட்சம் லிட்டர் கழிவுநீரை நன்னீராக மாற்றும்
/
காஞ்சியில் ரூ.68 கோடியில் புதிய சுத்திகரிப்பு நிலையம்...அமைகிறது: தினம் 360 லட்சம் லிட்டர் கழிவுநீரை நன்னீராக மாற்றும்
காஞ்சியில் ரூ.68 கோடியில் புதிய சுத்திகரிப்பு நிலையம்...அமைகிறது: தினம் 360 லட்சம் லிட்டர் கழிவுநீரை நன்னீராக மாற்றும்
காஞ்சியில் ரூ.68 கோடியில் புதிய சுத்திகரிப்பு நிலையம்...அமைகிறது: தினம் 360 லட்சம் லிட்டர் கழிவுநீரை நன்னீராக மாற்றும்
ADDED : ஜூன் 19, 2025 01:12 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், புதிதாக 68 கோடி ரூபாய் மதிப்பில், நத்தப்பேட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 360 லட்சம் லிட்டர் கழிவுநீரை இங்கு சுத்திகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் நான்கு மண்டலங்களில் 51 வார்டுகள் உள்ளன. இதில், 40 வார்டுகளில் உள்ள தெருக்களுக்கு, 1975ம் ஆண்டு முதல், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது, நகரவாசிகளுக்கு பெருமளவில் பயனளித்தது.
நகரப்பகுதியில், குடியிருப்பு, வணிகம் என, மொத்தம் 21,000 பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. செவிலிமேடு, ஓரிக்கை பகுதிகளில் புதிதாக 15,000 இணைப்புகள் கொடுக்கப்படுகின்றன.
நகரில் சேகரமாகும் கழிவுநீர், சுத்திகரித்து நத்தப்பேட்டை ஏரியில் விடுவதற்கு, திருக்காலிமேடில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக செயல்பட்ட இந்த சுத்திகரிப்பு நிலையம், பழுதடைந்து உள்ளது.
இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமல், நத்தப்பேட்டை ஏரியில் நேரடியாக கலக்கிறது. இதனால் ஏரி நீர் மாசடைந்து விவசாயம் செய்ய முடியவில்லை என, நத்தப்பேட்டை மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். தவிர, சுகாதாரமும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, புதிய கழிவுநீர் அமைக்க வேண்டிய கட்டாயம் மாநகராட்சிக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், செவிலிமேடு, நத்தப்பேட்டை, ஓரிக்கை, திருக்காலிமேடு போன்ற பகுதிகளில் புதிய இணைப்பு வழங்க, பாதாள சாக்கடை திட்டத்திற்கு உலக வங்கி 300 கோடி ரூபாய் நிதி உதவி அளித்தது.
இதனுடன், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் புதிதாக அமைக்கவும், 68 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது.
இதையடுத்து, புதிய சுத்திகரிப்பு நிலையம், நத்தப்பேட்டை ஏரியில் கட்டமைக்கப்படுகிறது. அதற்கான பணிகள் துவங்கியுள்ளன. குறைவான இடத்திலேயே இந்த சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கவும், மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதாவது, 'சீக்குவல் பேட்ஜ் ரியாக்டர்' எனப்படும் எஸ்.பி.ஆர்., தொழில்நுட்பம் வாயிலாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட உள்ளது.
ஏற்கனவே இருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், ஒரு நாளைக்கு, 120 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரித்து வந்தது.
வருங்காலத்தை கருத்தில் கொண்டு, 360 லட்சம் லிட்டர் சுத்திகரிப்பு செய்யும் வகையில், புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தை, சென்னை, தாம்பரம் மாநகராட்சி சேர்ந்து செயல்படுத்துகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி பொறியாளர் ஒருவர் கூறியதாவது:
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டு சுற்றிலும் கான்கிரீட் சுவர் கட்டும் பணிகள் நடக்கின்றன. பல்வேறு தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், அங்கு பொருத்தப்பட உள்ளன. அடுத்த இரு ஆண்டுகளில், இந்த நிலையம் செயல்பாட்டிற்கு வந்துவிடும்.
செவிலிமேடு, ஓரிக்கை போன்ற இடங்களிலும் பாதாள சாக்கடை திட்டம் வந்துவிட்டதால், மாநகராட்சி முழுதும் சேகரமாகும் கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டியிருக்கும்.
அதனாலேயே, ஒரு நாளைக்கு 360 லட்சம் லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் வகையில் இந்த நிலையத்தை கட்டமைக்கிறோம்.
ஐந்து ஆண்டுகள் வரை, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பராமரிக்க வேண்டும்.
கழிவுநீர் சுத்திகரித்து கிடைக்கும் தண்ணீரை, தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த முடியும். தேவைப்பட்டால், விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம்; குடிநீருக்கு பயன்படுத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.