/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆளும் கட்சியினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு...காரசாரம்!:காஞ்சி மாநகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம்
/
ஆளும் கட்சியினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு...காரசாரம்!:காஞ்சி மாநகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம்
ஆளும் கட்சியினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு...காரசாரம்!:காஞ்சி மாநகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம்
ஆளும் கட்சியினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு...காரசாரம்!:காஞ்சி மாநகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம்
ADDED : நவ 20, 2024 11:17 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், செப்.,மாதம் நடந்த கூட்டம் விவாதம் இன்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தங்கள் வார்டு பிரச்னைகள் சரி செய்யப்படவில்லை என 2நேற்று நடந்த கூட்டத்தில் காரசாரமாக விவாதித்தனர்.குடிநீர், பாதாள சாக்கடை, குப்பை என அடிப்படை பிரச்னைகள பற்றி, ஆளும் கட்சி கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். மேயருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கவுன்சிலர்கள் பலர் வாக்குவாதம் ஏதுமின்றி அமைதியாக பேசி சென்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம், கடந்த செப்.,3ம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில் விவாதமின்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் கவுன்சிலர்கள் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இரு மாதங்களுக்கு பின், நவ.,19ல் மாநகராட்சி கூட்டம் நடக்கும் என, அறிவிக்கப்பட்டது. திடீரென ஒத்திவைக்கப்பட்டு, 20ம் தேதிக்கு மாநகராட்சி கூட்டம் மாற்றப்பட்டது. இதையடுத்து, அண்ணா அரங்கத்தின் முதல் மாடியில், நேற்று காலை 10.30 மணிக்கு, மாநகராட்சி கூட்டம், மேயர் மகாலட்சுமி தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில், கமிஷனர் நவேந்திரன், மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். கூட்டம் துவங்கும் முன், மாநகராட்சி ஊழியர்கள் கவுன்சிலர்களிடன் வருகை பதிவேட்டில் கையெழுத்து வாங்கினர்.
வருகை பதிவேடு புத்தகத்தை தவிர்த்து, பிரின்ட் செய்யப்பட்ட காகிதத்தில் கையெழுத்து வாங்கியதால், கவுன்சிலர்கள் அதிருப்தி தெரிவித்தனர். அதற்கு, பழைய வருகை பதிவேடு முழுமையாக நிரம்பிவிட்டதாக கமிஷனர் நவேந்திரன் பதில் அளித்தார்.
ஆனால், கவுன்சிலர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் கவுன்சிலர்கள் சமாதானம் ஆகி, கையெழுத்து போட துவங்கினர். இதையடுத்து, மேடைக்கு மேயர் மகாலட்சுமி வந்ததை தொடர்ந்து, மாநகராட்சி கூட்டம் துவங்கியது.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
தேவராஜன் - தி.மு.க.,: மாநகராட்சி முழுதும் நாய்கள் தொல்லை அதிகரித்தபடியே உள்ளது. நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
நவேந்திரன் - கமிஷனர்: தன்னார்வ தொண்டு நிறுவனம் வாயிலாக நாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளோம். கருத்தடை செய்ய தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய உள்ளோம். அதற்கான தீர்மானங்கள் இந்த முறை நிறைவேற்றுகிறோம்.
மல்லிகா - தி.மு.க.,: எங்கள் வார்டில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் தரம் பற்றி பரிசோதனை செய்ய கூறியிருந்தோம். பலருக்கு உடல்நல பிரச்னை ஏற்படுகிறது.
மகாலட்சுமி - மேயர்: ஏற்கனவே குடிநீரை பரிசோதனைக்கு அனுப்பி விட்டோம். முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.
குமரவேல் - தி.முக.,: அண்ணா நுாற்றாண்டு பூங்கா பராமரிப்பு சரிவர இல்லை. அண்ணா பூங்கா எதற்காக செயல்பட வேண்டும். அவற்றை மூடி விடுங்கள். தண்ணீர் உட்பட எந்த வசதியும் இல்லை.
நவேந்திரன் - கமிஷனர்: நிதி ஆதாரம் இல்லாதது தான் சிக்கல். கார்ப்பரேட் நிதி உள்ளிட்ட நிதி ஆதாரத்தை எதிர்பார்க்கிறோம். அண்ணா பூங்கா புது பொலிவுடன் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சண்முகநாதன் - அ.தி.மு.க.,: மாநகராட்சி பார்க்கிங் டெண்டர் விவகாரத்தில் விதிமீறல் நடக்கிறது. மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையிலான டெண்டரில், அதிகாரிகள் முறையாக நடந்து கொள்ளவில்லை. அதேபோல, 50 ரூபாய் வசூலிக்க வேண்டிய பார்க்கிங் கட்டணம், 100 ரூபாய் வசூலிக்கின்றனர். இவற்றை யாரும் கேட்பதில்லை.
நவேந்திரன் - கமிஷனர்: ஏல அறிவிப்பு முறையாக வெளியிடப்பட்டது. அதில் எந்தவித விதிமீறலும் இல்லை. உங்களுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கிறேன்.
புனிதா - அ.தி.மு.க.,: 23வது வார்டில் உள்ள கழிவுநீர் பிரச்னை தீர இல்லை. எங்கள் வார்டில் ஆறாக ஓடுகிறது.
மகாலட்சுமி - மேயர்: புகார் தெரிவித்தவுடன், கழிவுநீர் வாகனம் அனுப்பி நடவடிக்கை எடுக்கிறோம். அதேபோல, கழிவுநீர் பிரச்னையை சரி செய்ய, 2 ஜெட்ராடிங் வாகனங்கள் வாங்க உள்ளோம். அதற்கான ஏற்பாடு நடக்கிறது.