/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆதிதிராவிடர் விடுதிகளுக்கு நிதி தராமல் இழுத்தடிப்பதாக...குற்றச்சாட்டு!:கடன் வாங்கும் வார்டன்கள்; மாணவர்களுக்கான வசதிகள்?
/
ஆதிதிராவிடர் விடுதிகளுக்கு நிதி தராமல் இழுத்தடிப்பதாக...குற்றச்சாட்டு!:கடன் வாங்கும் வார்டன்கள்; மாணவர்களுக்கான வசதிகள்?
ஆதிதிராவிடர் விடுதிகளுக்கு நிதி தராமல் இழுத்தடிப்பதாக...குற்றச்சாட்டு!:கடன் வாங்கும் வார்டன்கள்; மாணவர்களுக்கான வசதிகள்?
ஆதிதிராவிடர் விடுதிகளுக்கு நிதி தராமல் இழுத்தடிப்பதாக...குற்றச்சாட்டு!:கடன் வாங்கும் வார்டன்கள்; மாணவர்களுக்கான வசதிகள்?
ADDED : நவ 25, 2024 01:38 AM
காஞ்சிபுரம்:ஆதிதிராவிட நலத்துறை மாணவ - மாணவியர் விடுதிகளில், காய்கறி மற்றும் பராமரிப்பு செலவினங்களுக்கான நிதி, எட்டு மாதங்களாக வழங்காமல் அரசு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடன் வாங்கி விடுதிகளை நடத்தும் நிலைக்கு, வார்டன்கள் தள்ளப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கான வசதிகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார்கள் கட்டுப்பாட்டில், காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுாரில், 32 பள்ளிகள், 19 விடுதிகள்; செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகத்தில், 63 பள்ளிகள், 28 விடுதிகள் உள்ளன. இதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களிலும், 95 ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகள், 47 மாணவ - மாணவியர் விடுதிகளில், 12,639 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இதில், 2,509 மாணவ - மாணவியர் விடுதிகளில் தங்கியுள்ளனர்.
இந்த மாணவ - மாணவியருக்கு அரிசி, சமையல் எண்ணெய், காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்களை வாங்குவதற்கு, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாதந்தோறும் குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்படுகிறது. அதாவது, கல்லுாரி விடுதியில் ஒருவருக்கு, 1,500 ரூபாய்; பள்ளி விடுதியில் ஒருவருக்கு, 1,400 ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.
இதில், ஸ்ரீபெரும்புதுார், படப்பை ஆகிய தாலுகாக்களில் இயங்கும் விடுதிகளுக்கு, நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளது. காஞ்சி, உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய தாலுகாக்களில் இருக்கும் எட்டு விடுதிகளில், 250க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, 2.35 கோடி ரூபாய் நிதி கிடைக்கவில்லை. இந்த நிதி, கடந்த ஏப்ரல் மாதம் முதல், எட்டு மாதங்களாக நிதி விடுவிக்கப்படவில்லை.
இதனால், ஆதிதிராவிட விடுதி மாணவ - மாணவியருக்கு, காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி போட முடியாமல், வார்டன்கள் திணறும் சூழல் உருவாகி உள்ளது.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஆதிதிராவிட நலத்துறை விடுதி பணியாளர் ஒருவர் கூறியதாவது:
விடுதி மாணவ- - மாணவியருக்கு குறிப்பிட்ட அளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியை பயன்படுத்தி மாணவ- - மாணவியரின் உணவு பட்டியலின்படி சமைத்து கொடுக்கிறோம்.
ஏப்ரல் மாதம் முதல் நிதி கிடைக்காததால், ஏற்கனவே வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை. கடைக்காரர்களுக்கு கடன் தொகை பைசல் செய்தால்தான் மீண்டும் கடன் கொடுப்பார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறி நிற்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ - மாணவியருக்கு ஏற்ப, அரசு நிதி ஒதுக்குகிறது. ஒரு சில விடுதி காப்பாளர்கள், சரியான நேரத்தில் மாதாந்திர செலவின பொருட்களின் பில்லை, சம்பந்தப்பட்ட நலத் துறை உயரதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதில்லை. இதனால், ஒரு சிலருக்கு பணம் செல்லாமல் இருக்கும். அதை ஆய்வு செய்து, நிதி கிடைக்காத விடுதிகளுக்கு, நிதி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை பள்ளி மாணவ - மாணவியர் விடுதிகளில், பயோ மெட்ரிக் வருகை பதிவேடு இயந்திரம் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த இயந்திரத்தின் வாயிலாக, மாணவர்களின் வருகை பதிவு உறுதி செய்யப்படும்.
மாணவ - மாணவியரின் பாதுகாப்பு நலன் கருதி விடுதி முழுதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வளர்ச்சி பணிகளின் வாயிலாக, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் வருகை உறுதி செய்யப்படும். இதனால், போலியாக வருகை பதிவேடுகள் மற்றும் போலி செலவினங்களை கணக்கு காட்டுவதற்கு, கடிவாளம் போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.