sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

'அதிக லாபம் தரும் பயிராக மக்காச்சோளம் உள்ளது' விவசாயிகள் பயிரிட வேளாண் பல்கலை அழைப்பு

/

'அதிக லாபம் தரும் பயிராக மக்காச்சோளம் உள்ளது' விவசாயிகள் பயிரிட வேளாண் பல்கலை அழைப்பு

'அதிக லாபம் தரும் பயிராக மக்காச்சோளம் உள்ளது' விவசாயிகள் பயிரிட வேளாண் பல்கலை அழைப்பு

'அதிக லாபம் தரும் பயிராக மக்காச்சோளம் உள்ளது' விவசாயிகள் பயிரிட வேளாண் பல்கலை அழைப்பு


ADDED : டிச 28, 2024 01:23 AM

Google News

ADDED : டிச 28, 2024 01:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துறையும், தமிழ்நாடு வேளாண் பல்கலையின் அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் - மக்காச்சோளம் இணைந்து, காஞ்சிபுரம் வேளாண் துறை இணை இயக்குனர் அலுவலகத்தில், மக்காச்சோளம் சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தின.

இதில், வேளாண் துறை அலுவலர் விஜயலட்சுமி வரவேற்புரையாற்றினார். வேளாண் துறை இணை இயக்குனர் முருகன் முன்னுரையாற்றினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் - வேளாண்மை ராஜ்குமார் சிறப்புரையாற்றினார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை சிறுதானியங்கள் துறை பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். பூச்சியியல் துறை இணை பேராசிரியர் சீனிவாசன், உழவியல் துறை இணை பேராசிரியர் கதிர்வேலன் ஆகியோர் தொழில்நுட்ப உரையாற்றினர். இதில், மக்காச்சோளம் சாகுபடி பற்றி விவசாயிகள் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

காஞ்சிபுரம் வேளாண் இணை இயக்குனர் முருகன் பேசுகையில், 'காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்று பயிராக மக்காச்சோளம் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும். ஊத்துக்காடு கிராமத்தில், விவசாயி ஒருவர் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.

'மேலும் சில விவசாயிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்காச்சோளத்தை பயிரிட்டுள்ளனர். நாமக்கல் போன்ற தெற்கு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிரிடுகின்றனர். இதுபோல், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மக்காச்சோளம் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும்' என்றார்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார் பேசியதாவது:

கோவில்பட்டி, சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில், அக்டோபர் மாதம் பெய்யக்கூடிய மழையை நம்பி பயிரிடுகின்றனர். அப்பகுதி வானம் பார்த்த பூமியாக உள்ளது. இருப்பினும், மக்காச்சோளம் வாயிலாக அதிக லாபம் ஈட்டுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகள் அதிகம் உள்ளதால், அதிகமாக பயிரிட்டு லாபம் எடுக்க முடியும். மக்காச்சோளம் கோழி தீவனம், பிஸ்கட் தயாரிப்பு, எத்தனால் போன்றவைக்கு அதிகளவு தேவைப்படுகிறது. இப்போது, பேபிகார்ன் கூட அதிகளவு விற்பனை செய்கின்றனர். மக்காச்சோளம் லாபம் தரக்கூடிய பயிராக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

வேளாண் பல்கலையின் உழவியல் துறை இணை பேராசிரியர் கதிர்வேலன் பேசுகையில், ''மக்காச்சோள பயிர் ரகங்களும், அவற்றை எப்படி நடவு செய்ய வேண்டும் எனவும், களைகொல்லி பயன்படுத்தும் முறை,'' குறித்து எடுத்து கூறினார்.

பின், பூச்சியியல் துறை இணை பேராசிரியர் சீனிவாசன் பேசுகையில், “மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழுவை அழிக்கும் முறை, அதற்கு தேவையான மருந்துகள், எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மருந்து அடிக்க வேண்டும்,” உள்ளிட்ட வழிமுறைகளை கூறினார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை சிறுதானியங்கள் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் சிவக்குமார் பேசியதாவது:

நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருப்பூர் போன்ற பகுதிகளில், மக்காச்சோளம் விதைச்சு 45 குவிண்டால் எடுக்க முயற்சி செய்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாகுபடி நன்றாக இருக்கும். மக்காச்சோளம் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

மாட்டுத்தீவனம், கோழி தீவனங்களை தொடர்ந்து, எத்தனால் உற்பத்திக்கு அதிகளவு தேவைப்படுகிறது. கும்மிடிபூண்டி அருகேயுள்ள எஸ்.எல்.பி., எத்தனால் நிறுவனம் அதிகளவு எத்தனால் உற்பத்தி செய்கிறது.

இதுபோன்ற எத்தனால் நிறுவனங்களுக்கு அதிகளவு மக்காச்சோளம் தேவைப்படுவதால், 1 கிலோ 25 ரூபாய் வரை விலை போகிறது. பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதால், அதன் தேவையும் அதிகரித்துள்ளது.

பீஹார், மஹாராஷ்டிராவில் இருந்து மக்காச்சோளம் தமிழகம் வருகிறது. விவசாயிகள் மக்காச்சோளம் உற்பத்தி செய்தால், ஒரு நாள் கூட வீட்டில் வைத்திருக்க தேவை இருக்காது. எத்தனால் நிறுவனங்கள் அவற்றை உடனடியாக வாங்கி கொள்ளும். ஏக்கருக்கு 40,000 ரூபாய் வரை இதில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, 4,000 ரூபாய் மதிப்புள்ள, 8 கிலோ மக்காச்சோளம் விதை, களை கொல்லி, நுண்ணுயிர் உரம், பூச்சி மருந்து, நுண்ணுாட்ட சத்து உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. வேளாண் துறை துணை இயக்குனர் கிருஷ்ணவேனி நன்றி கூறினார்.

எங்கள் கிராமத்தில் நான் அரை ஏக்கர் மக்காச்சோளம் விதைத்துள்ளேன். படைப்புழு மட்டுமே அதில் பிரச்னையாக இருந்தது. அதை எப்படி சரிசெய்ய வேண்டும் என, இந்த கருத்தரங்கில் தெளிவாக கூறினர். மக்காச்சோள சாகுபடி அதிகளவு செய்ய இந்த பயிற்சி பயனுள்ளதாக இருந்தது. மக்காச்சோள சாகுபடி பற்றி பல சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் பெற்றேன்.

- கே.பிரசாந்த்,

அத்தியூர் மேல்துாளி,

உத்திரமேரூர்.

மக்காச்சோள சாகுபடி பற்றி முழுமையாக எங்களுக்கு தெரியாது. இந்த கருத்தரங்கு பயனுள்ளதாக இருந்தது. மக்காச்சோளம் எப்படி பயிரிட வேண்டும், சந்தை வாய்ப்புகள், சாகுபடி, லாபம் போன்ற விபரங்கள் புரியும்படி எளிதாக இருந்தது.

- கே.சாந்தி,

உத்திரமேரூர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல வகையான தோட்ட பயிர்களை விதைத்துள்ளோம். ஆனால், மக்காச்சோளம் விதைத்தது இல்லை. அதிகாரிகளின் கருத்தரங்கு காரணமாக, மக்காச்சோளம் விதைக்க ஆர்வமாக உள்ளது.

- எஸ்.பலராமன்,

புத்தேரி,

காஞ்சிபுரம்.






      Dinamalar
      Follow us