/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் புறவழிச்சாலைக்கு நிதி ஒதுக்கீடு... ரூ.52.45 கோடி!:குறுகிய சாலையால் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு
/
உத்திரமேரூரில் புறவழிச்சாலைக்கு நிதி ஒதுக்கீடு... ரூ.52.45 கோடி!:குறுகிய சாலையால் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு
உத்திரமேரூரில் புறவழிச்சாலைக்கு நிதி ஒதுக்கீடு... ரூ.52.45 கோடி!:குறுகிய சாலையால் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு
உத்திரமேரூரில் புறவழிச்சாலைக்கு நிதி ஒதுக்கீடு... ரூ.52.45 கோடி!:குறுகிய சாலையால் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு
ADDED : பிப் 08, 2024 09:16 PM
உத்திரமேரூர்::உத்திரமேரூர் புறவழிச்சாலை திட்டத்திற்கு 52.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அதற்கான பணி விரைவில் துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், குறுகிய உத்திரமேரூர் சாலையால் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் நகரில், 40,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். உத்திரமேரூரைச் சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், உத்திரமேரூர் வழியாக செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யாறு, வந்தவாசி மற்றும் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
உத்திரமேரூர் சாலை மிகவும் குறுகியதாக உள்ளதால், காலை மற்றும் மாலை நேரங்களில், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இப்பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், குறிப்பிட்ட இடத்திற்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால், உத்திரமேரூரில் புறவழிச்சாலை ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
அறிவிப்பு
இக்கோரிக்கையை ஏற்று, 2013ல், சட்டசபை கூட்டத் தொடரின் போது உத்திரமேரூரில் புறவழிச்சாலை அமைக்க, அப்போதைய அ.தி.மு.க., அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான முதற்கட்ட பணிக்காக, 7 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
உத்திரமேரூர் --- புக்கத்துறை சாலையில், ஏ.பி.சத்திரம் அருகே துவங்கி, மல்லிகாபுரம் விவசாய நிலங்கள் வழியாக 4.2 கி.மீ., துாரத்திற்கு வேடபாளையம் சாலையில் வந்து புறவழிச்சாலை இணையும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக நிலம் அளவீடு செய்து, தனியாரின் நிலங்களை கையகப்படுத்துதல், நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகை போன்றவற்றின் கணக்கீடு உள்ளிட்ட பணிகளில் அச்சமயம் வருவாய் துறையினர் ஈடுபட்டனர்.
நிதி தேவை
ஆனால், ஒதுக்கீடு செய்த நிதி போதுமானதாக இல்லை எனக்கூறி, அடுத்தகட்ட பணிகளை தொடர்வதில், வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மெத்தனம் காட்டி வந்தனர். இதனால், 10 ஆண்டுகளாக இத்திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டது.
இத்திட்டத்தை நிறைவேற்றக் கோரி, உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும்வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், நெடுஞ்சாலை துறை சார்பில், கடந்த ஆண்டு இத்திட்டத்திற்கு புதிய திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசாணைக்கு அனுப்பப்பட்டது.
இதை அடுத்து, உத்திரமேரூரில் புறவழிச் சாலை அமைக்க தற்போது 52.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை செங்கல்பட்டு உதவி கோட்ட பொறியாளர் கோவிந்தராஜ் கூறியதாவது:
உத்திரமேரூரில் புறவழிச் சாலை திட்டத்திற்கு முதற்கட்டமாக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து நில அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நிலம் கையகப்படுத்துவதற்காக மேலும் 26.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனிடையே, நிலமதிப்பு உயர்வு காரணமாக இழப்பீட்டு தொகை மற்றும் கருணை தொகையையும் அரசு கூடுதலாக்கியது. இதனால், புறவழிச்சாலை திட்டத்துக்கான நிதி தேவை அதிகரித்தது.
அதன்படி, புதிய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, திருத்திய நிர்வாக ஒப்புதல் பெற அரசாணைக்கு அனுப்பி வைத்தோம்.
எதிர்பார்ப்பு
அதன் தொடர்ச்சியாக, உத்திரமேரூர் புறவழிச்சாலை சாலை திட்டம் செயல்படுத்த தற்போது 52.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து, காஞ்சிபுரம் நிலம் எடுப்பு சிறப்பு தாசில்தார் கண்காணிப்பில், நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
வரும் லோக்சபா தேர்தலுக்குள் புறவழிச்சாலைக்கான பணி துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

