/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாற்றில் கூடுதலாக உயர்மட்ட பாலம் அமைவதால்...நிம்மதி!: ரூ.100 கோடியில் கட்ட நெடுஞ்சாலை துறை நடவடிக்கை
/
பாலாற்றில் கூடுதலாக உயர்மட்ட பாலம் அமைவதால்...நிம்மதி!: ரூ.100 கோடியில் கட்ட நெடுஞ்சாலை துறை நடவடிக்கை
பாலாற்றில் கூடுதலாக உயர்மட்ட பாலம் அமைவதால்...நிம்மதி!: ரூ.100 கோடியில் கட்ட நெடுஞ்சாலை துறை நடவடிக்கை
பாலாற்றில் கூடுதலாக உயர்மட்ட பாலம் அமைவதால்...நிம்மதி!: ரூ.100 கோடியில் கட்ட நெடுஞ்சாலை துறை நடவடிக்கை
ADDED : டிச 11, 2024 12:26 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு குறுக்கே ஏற்கனவே உள்ள உயர்மட்ட பாலம் சேதமாகி வரும் நிலையில், அதன் அருகே புதிதாக, 100 கோடி ரூபாய் மதிப்பில், உயர்மட்ட பாலம் கட்ட நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆய்வு பணிகளை, கண்காணிப்பு பொறியாளர் உள்ளிட்டோர் நேற்று மேற்கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் வழியிலும், வந்தவாசி செல்லும் வழியிலும் பாலாறு பாய்கிறது. இந்த இரு முக்கிய சாலைகளின் குறுக்கே, ஓரிக்கை மற்றும் செவிலிமேடு ஆகிய இரு இடங்களில், 25 ஆண்டுகளுக்கு முன், தரைப்பாலம் மட்டுமே இருந்த நிலையில், 1997 -- 98ம் ஆண்டுகளில், இரு சாலைகளின் குறுக்கே புதிதாக உயர்மட்ட பாலங்களை நெடுஞ்சாலைத் துறை கட்டியது.
இதனால், உத்திரமேரூர் மற்றும் வந்தவாசி மார்க்கமாக சென்று வரும் வாகனங்களுக்கு, இரு பாலங்களும் அதிகளவில் பயன்பட்டு வருகின்றன. ஓரிக்கையில் உள்ள பாலாறு பாலத்தை காட்டிலும், செவிலிமேடு பகுதியில் உள்ள பாலாறு பாலத்தை அதிக வாகனங்கள் பயன்படுத்துகின்றன.
இதற்கு காரணம், வந்தவாசி மட்டுமல்லாமல், திண்டிவனம், செய்யாறு, திருவண்ணாமலை, சேலத்திற்கு, இவ்வழியாக தான் செல்ல வேண்டும்.
பாலம் கட்டி, 25 ஆண்டுகளான நிலையில், இதுவரை இந்த பாலங்களில் மின் விளக்கு வசதி கிடையாது. இது ஒருபுறம் இருக்க, செவிலிமேடு உயர்மட்ட பாலம் சிறிது, சிறிதாக சேதமாகி வந்தது.
பாலத்தின் சாலையில் சிமென்ட் காரை பெயர்ந்து, கம்பிகள் தெரியும் அளவுக்கு பாலம் சேதமானது. பாலத்தின் இணைப்பு பகுதியில் பல இடங்களில் ஓட்டை ஏற்பட்டது. பள்ளங்களில் விழுந்து வாகன ஓட்டிகள் பலரும் காயமடைந்தனர்.
கனரக வாகனங்கள் விதிமுறைகளை மீறி அதிக எடையுள்ள பொருட்களை ஏற்றி செல்வதாலும், ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் இந்த பாலம் வழியாக பிற மாவட்டங்களுக்கு சென்று வருவதாலும் பாலம் சேதமடைந்துள்ளது.
நெடுஞ்சாலை துறையினர் பலமுறை இப்பாலத்தை சீரமைத்த போதும், தொடர்ந்து மோசமான நிலையில் பாலம் உள்ளது.
இதனால், செவிலிமேடு பாலாறு பாலத்திற்கு மாற்றாக, அருகிலேயே புதிதாக உயர்மட்ட பாலத்தை கட்ட நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே உள்ள பாலாறு பாலம் அருகே, 100 கோடி ரூபாயில் பாலம் அமைப்பதற்கான பூர்வாங்க பணி மற்றும் ஆய்வு பணிகளை நெடுஞ்சாலை துறையினர் துவக்கியுள்ளனர்.
மாநில நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார், கோட்ட பொறியாளர் முரளிதரன், உதவி கோட்ட பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர் விஜய் ஆகியோர், செவிலிமேடு பாலாற்று பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர்.
புதிதாக அமைக்கப்பட உள்ள பாலம், 900 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைய உள்ளது. பாலத்தின் இரு புறத்தில் நடைபாதையும், பக்கவாட்டு தடுப்புச்சுவர்களும் அமைக்கப்படும்.
புஞ்சையரசந்தாங்கல் கிராமத்தில் துவங்கும் பாலம், செவிலிமேடு புறவழிச்சாலை அருகே முடியும் வகையில் கட்டப்படவுள்ளது. இதற்கான, கருத்துரு, திட்டமதிப்பீடு, பாலம் அமையும் இடம் போன்ற விபரங்கள் அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
அதன்பின், நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு, 'டெண்டர்' பணிகள் முடித்த பின், பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறியதாவது:
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே உள்ள உயர்மட்ட பாலம் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும்.
அதன் அருகே, புதிதாக உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். புதிய பாலம் கட்ட 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளோம்.
கருத்துரு அரசுக்கு அனுப்பியுள்ளோம். பாலம் எந்த இடத்தில் அமைந்தால், வாகனங்கள் சென்று வர எளிதாக இருக்கும் என்பதற்கும், சாலைகளை எளிமையாக இணைப்பது தொடர்பாக கண்காணிப்பு பொறியாளர் மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
நிதி ஒதுக்கீடு பெற்ற பின், பாலம் கட்டுமான பணிகள் துவங்கும். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள உயர்மட்ட பாலம் அளவுக்கு நீளம், அகலம் கொண்டதாகவே இப்புதிய பாலமும் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.