/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கொட்டி அராஜகம்
/
மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கொட்டி அராஜகம்
ADDED : அக் 27, 2024 12:29 AM

காஞ்சிபுரம்:வீடுகளில் சேகராகும் கழிவுநீர் எடுக்கும் டேங்கர் லாரிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் முறையாக, பாதுகாப்புடன் திறந்து விட வேண்டும். ஆனால், காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் கழிவுநீரை, மழைநீர் கால்வாயில் லாரிகள் வாயிலாக விடுவது தொடர் கதையாகி வருகிறது.
ஓரிக்கை, செவிலிமேடு போன்ற பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் இன்னும் வராததால், அங்குள்ள அனைத்து வீடுகளிலும் செப்டிக் டேங்க்கில் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு, லாரிகள் வாயிலாக அப்புறப்படுத்தப்படுகிறது.
கழிவுநீரை எடுத்து செல்லும் லாரிகள், நத்தப்பேட்டையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திற்கு அவற்றை கொண்டு செல்ல வேண்டும். ஆனால், பலரும் அருகில் உள்ள மழைநீர் கால்வாயிலும், திறந்தவெளி பகுதியிலும் கழிவுநீரை திறந்து விடுகின்றனர்.
ஓரிக்கை அருகேயுள்ள அதியமான் நகர் வழியாக செல்லும் மழைநீர் கால்வாயில், கழிவுநீரை திறந்துவிடும் லாரியை, அங்கு வசிப்போர் வீடியோவாக எடுத்து, காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கும் அனுப்பியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் அனுப்பியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட லாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதியமான் நகர்வாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர். மழைநீர் கால்வாயில் கழிவுநீரை திறந்துவிடும் லாரி பறிமுதல் செய்யப்படும் எனவும், வழக்குப்பதிவு செய்யப்படும் என, மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தாலும், அவற்றை யாரும் மதிக்காமல் மழைநீர் கால்வாயில் திறந்துவிடுவது தொடர் கதையாகி வருகிறது.