/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பூமி பூஜையுடன் கிடப்பில் போடப்பட்ட அங்கன்வாடி மைய கட்டுமானப் பணி
/
பூமி பூஜையுடன் கிடப்பில் போடப்பட்ட அங்கன்வாடி மைய கட்டுமானப் பணி
பூமி பூஜையுடன் கிடப்பில் போடப்பட்ட அங்கன்வாடி மைய கட்டுமானப் பணி
பூமி பூஜையுடன் கிடப்பில் போடப்பட்ட அங்கன்வாடி மைய கட்டுமானப் பணி
ADDED : ஏப் 14, 2025 12:41 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 24வது வார்டு, வி.என்.பெருமாள் தெருவில், 30 ஆண்டுகளுக்கு முன், 'சிமென்ட் ஷீட்' வேயப்பட்ட அங்கன்வாடி மையம் சிதிலமடைந்து, மழைக்கு ஒழுகும் நிலையில் இருந்தது.
இதனால், மழைக்காலத்தில் அங்கன்வாடி மையத்திற்கு தங்களது குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து பழைய அங்கன்வாடி கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 15.06 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த ஆண்டு நவ., 7ம் தேதி நடந்த பூமி பூஜையில், அடிக்கல் நாட்டி அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணியை துவக்கி வைத்தார்.
இதையடுத்து, அங்கன்வாடி மையம் அதே தெருவில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் ஒரு குறுகிய அறையில் இடமாற்றம் செய்யப்பட்டது.
பூமி பூஜை போடப்பட்டு, அடிக்கல் நாட்டி, ஐந்து மாதங்களுக்கு மேலாகியும், புதிய அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணி துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதனால், தற்காலிகமாக முதல் மாடியில் இயங்கும் அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் குழந்தைகள் படிகளில் ஏறிச் சென்று வரும்போது தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, புதிய அங்கன்வாடி மையம் கட்டுமானத்தை துவக்கி, பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அங்கன்வாடி மையத்தை ஒட்டியுள்ள பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு கட்டடம் ஒன்று உள்ளது. இதனால், கட்டுமானப் பணிக்கு இடையூறாக உள்ளது.
இதுகுறித்து ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றியவுடன் அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணி விரைவில் துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் வி.என்.பெருமாள் தெருவில், கடந்த நவம்பர் மாதம், புதிய அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை போடப்பட்டும், பணி துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.