/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இ - சேவை மையத்தில் இயங்கும் அங்கன்வாடி
/
இ - சேவை மையத்தில் இயங்கும் அங்கன்வாடி
ADDED : நவ 17, 2024 12:42 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஒன்றியம், விஷார் ஊராட்சியில், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இதனால், பழைய கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, கிராமத்தினர் வலியுறுத்தினர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட நிதி மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து 14 லட்சம் ரூபாய் செலவில், இரு ஆண்டுகளுக்கு முன் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுமானப் பணி துவங்கியது.
மாற்று ஏற்பாடாக அங்கன்வாடி மையம் இ- - சேவை மைய கட்டடத்தின் வராண்டாவில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், ஒராண்டிற்கும் மேலாக அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுமானப் பணி மந்தகதியில் நடந்து வருவதாக அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால், குழந்தைகள் போதுமான வசதி இல்லாமலும், பாதுகாப்பு இல்லாமலும், இ- - சேவை மைய வராண்டாவில் கல்வி கற்க வேண்டிய அவலநிலை உள்ளது. மழை பெய்யும்போது சாரல் அடிப்பதால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, விஷார் கிராமத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விஷார் கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விஷார் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை நேரில் சென்று ஆய்வு செய்து, கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.